×

அனுமதி கொடுத்தாலும் இயக்க முடியாத நிலை; புதுச்சேரியில் கேள்விக்குறியான டெம்போ தொழில்: அரசின் உதவியை எதிர்நோக்கும் டிரைவர்கள்

புதுச்சேரி: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தையே புரட்டி போட்டுள்ளது. புதுச்சேரியிலும் பொருளாதார பாதிப்பு அரசுக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஊரடங்கை தளர்த்தி மாநிலத்தின் வருவாயை ெபருக்குவதற்கான நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில மக்களின் வரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளதால் மதுபானங்கள் விற்பனை மட்டுமின்றி அனைத்து வியாபாரமும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலதிபர்கள், வியாபாரிகள், சிறு வணிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இதே நிலை நீடித்தால் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அரசை அவர்கள் எச்சரிக்கின்றனர். இதனிடையே புதுச்சேரியில் பொது போக்குவரத்து சேவையில் ஒன்றான டெம்போ சேவை முடக்கப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆவதால் அதன் உரிமையாளர்கள், டிரைவர்கள் என 250 குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு போக்குவரத்து நிறுவனமான பிஆர்டிசியும் மற்றும் ஆட்டோக்களும் புதுச்சேரியில் இயக்க அரசு அனுமதி வழங்கியும் அவர்களும் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். டெம்போ உரிமையாளர்களுக்கு தினவாடகையாக அவற்றை இயக்கும் ஓட்டுனர் ரூ.750 வரை செலுத்தி வந்தனர்.

தற்போது ஊரடங்கு நேரத்தில் வண்டியை இயக்கினால் இந்த பணத்தை நிச்சயம் வசூலிக்க முடியாது. தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில மக்களின் வரத்து இல்லாததும், உள்ளூர் மக்கள் கொரோனா பாதிப்பு காரணமாக அதிகளவில் நகர பகுதிகளுக்கு வந்து செல்வதை தவிர்த்து இருப்பதாலும் பிஆர்டிசி, ஆட்டோ சேவையே முடங்கியுள்ள நிலையில் தங்களால் டெம்போவை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு எதிர்காலமே கேள்விக்குறியாகி இருப்பதாக டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் புலம்புகின்றனர். அரசின் விதிமுறையான சமூக இடைவெளியை பின்பற்றி டெம்போவில் 4, 5 பேரை வைத்து இயக்கினால் எதிர்பார்த்த வசூல் கிடைக்காது என வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி பாரத மாதா டெம்போ விக்ரம் உரிமையாளர் சங்கத் தலைவர் முருகையனிடம் கேட்டபோது, புதுவை ேபருந்து நிலையம் அருகில் இருந்து கோரிமேடு, அய்யங்குட்டி பாளையம், முத்தியால்பேட்டை, சோனாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டெம்போ இயக்கப்பட்டு வந்தது. 135க்கும் மேற்பட்ட டெம்போக்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் டெம்போக்கள் அனைத்தும் 2 மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரியில் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. வெளிமாநில மக்கள் வந்தால்தான் நம்மூர் தொழிலாளர்களுக்கு பிழைப்பு. ஆனால் அதற்கான சாத்தியக்கூறு எதுவும் இப்போது இல்லை.

ஊரடங்கை அரசு முழுமையாக தளர்த்துவதற்கே இன்னும் 3, 4 மாதங்கள் ஆகலாம் என்று தெரிகிறது. அதுவரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் இருக்காது. இதனால் டெம்போக்களை இயக்க அரசு அனுமதி வழங்கினாலும் நாங்கள் நஷ்டத்துக்கு அவற்றை ஓட்ட முடியாத நிலையில் உள்ளோம். எனவே டெம்போ தொழிலில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள், டிரைவர்கள் என 250 பேருக்கு அரசு சார்பில் நிவாரணம் கேட்டு விரைவில் முதல்வரை சந்தித்து முறையிட திட்டமிட்டுள்ளோம் என்றார்.


Tags : Drivers ,Puducherry , Permission, Puducherry, Tempo Industry
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...