தமிழகம், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் மூலம் வர தடை; அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மராட்டியம், குஜராத், தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இ பாஸ் வைத்திருந்தவர்களைக் கூட கர்நாடகா அனுமதிக்கவில்லை.

தற்போது நாடு முழுவதும் விமானப் போக்குவரத்தும் தொடங்கி உள்ளது. விமான பயணிகளிடம் நடத்தப்படும் சோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதில் 46 பேர் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா திரும்பியவர்கள். மேலும் கர்நாடகாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,493 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல்படுத்த கர்நாடகா இறங்கியுள்ளது.

இதன் ஒருபகுதியாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரயில்கள் மற்றும் வாகனங்கள் எதனையும் அனுமதிக்க முடியாது என கர்நாடகா தடை விதித்துள்ளது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த எவருமே கர்நாடகாவுக்குள் நுழைய முடியாத நிலை உருவாகி உள்ளது. நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது என கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தது நினைவுகூறத்தக்கது.

Related Stories: