புதுகை மாவட்டத்தில் கொரோனா பெயரில் ரூ5000 பொருளுக்கு ரூ23 ஆயிரம் பில்: பிளீச்சிங், மாஸ்க், ஸ்பிரேயரில் பல கோடி மோசடி

* செலவினங்களுக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு

* தீர்மானத்தை நிறைவேற்ற கெஞ்சிய ஆணையர்

அறந்தாங்கி: அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கான பொருட்கள் அதிக விலைக்கு வாங்கியதில் பல கோடி மோசடி நடந்துள்ளதாக, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்வரி சண்முகநாதன் (திமுக) தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜெயசுதாகணேசன் (திமுக) முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: வெள்ளைச்சாமி (திமுக): அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு கொரோனா நிவாரண பணிகளுக்காக வழங்கப்பட்ட மெக்கபோன், முகக்கவசம், பிளீச்சிங் பவுடர், ஸ்பிரேயர் போன்ற அனைத்து பொருட்களும் தனியார் கடைகளில் வாங்கும் விலையைவிட பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. ரூ5 ஆயிரம் முதல் 5,500 வரை விலையில் விற்பனை செய்யப்படும் கிருமிநாசினி தெளிக்கும் ஸ்பிரேயர் ரூ23 ஆயிரம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

இதேபோல பல கோடி ரூபாய்க்கு பல மடங்கு அதிக விலைகொடுத்து கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் கொரோனாவின் பெயரைச் சொல்லி பல மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி, தனிநபர்கள் கொள்ளை லாபம் பார்ப்பதற்காக பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ள பொருட்களுக்கு உண்டான செலவினத்திற்கு ஒன்றியக் கவுன்சிலர்கள் நாங்கள் அனுமதி தர மாட்டோம்.

ஒன்றிய ஆணையர் அரசமணி: கொரோனா தடுப்பு பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கருத்தை பதிவு செய்து கொள்கிறோம். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் மூலம் பொருட்கள் வந்ததால், அந்த பொருட்களுக்கு உண்டான தொகையை நாங்கள் கொடுத்துவிட்டோம். அதனால் தீர்மானங்களை நிறைவேற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறேன். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் வெளியே வந்த திமுக உறுப்பினர் வெள்ளைச்சாமி அளித்த பேட்டி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல கோடி மதிப்பில் பொருட்கள் வாங்கியுள்ளனர்.

பல மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் நேரிடையாக பொருட்களை வாங்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தான் பொருட்களை அனுப்பியது. பில் தரும் பொருட்களின் கம்பெனிகாரர்களுக்கு செக் மட்டும் தான் கொடுத்தோம். பணம் தரவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் நெருக்கடி அளிக்கிறது என பதிலளிக்கின்றனர். எந்த ஒரு பொருளை வாங்கவேண்டுமானாலும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தான் வாங்க வேண்டும் என உள்ளது. இதில் பல மடங்கு விலை கொடுத்து பல கோடிக்கு மோசடி நடந்துள்ளது. தேவையில்லாத ெபாருட்களை மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் பொருட்களை அனுப்பியுள்ளது. பொருட்களை வந்து கொடுக்கும் சம்பந்தப்பட்ட கம்பெனிகாரர்களுக்கு செக்கை மட்டும் ஊராட்சி ஒன்றியம் கண்ணை மூடிக்கொண்டு வழங்க நிர்பந்தம் செய்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பொருட்களை வாங்குவதில் மெகா மோசடி நடந்துள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் நேரிடையாக பொருட்களை வாங்கவில்லை.

மாவட்ட நிர்வாகம் தான் பொருட்களை அனுப்பியது. பில் தரும் பொருட்களின் கம்பெனிகாரர்களுக்கு செக் மட்டும் தான் கொடுத்தோம். பணம் தரவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் நெருக்கடி அளிக்கிறது.

Related Stories: