×

கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் இல்லை: இதை மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்....மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்குள் அடங்காமல்தான் இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம் ஆகும். வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகிவிடாதீர்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் தற்போது வரை கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்தான செயலாகும். பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர வேண்டும், மேலும் இதை மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காத அரசு!!

* தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தாததால் தானே இத்தனை பேருக்கு தொற்று பரவியுள்ளது?

* திருமண மண்டபங்கள், கல்லூரிகளை ஏற்பாடு செய்து வைத்திருப்பதாக சொல்லும் அரசு, பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க தயங்குவது ஏன்?

* தொற்று உறுதி செய்யப்பட்டவர்களையும், அறிகுறி இல்லை என்று வீட்டுக்கு அனுப்பி வைப்பதால் தானே பரவல் அதிகமாகிறது?

* வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்கள், அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகிறார்களா? கண்காணிக்கப்பட்டு இருந்தால் இந்தளவுக்கு எண்ணிக்கை அதிகமாகி வருமா?

செயல்படாத அரசாங்கம்!!

* சென்னையில் அதிகாரிகள் குழுவை நியமனம் செய்து எத்தனை நாள் ஆகிவிட்டது? இன்னமும் தொற்று குறைந்தபாடு இல்லையென்றால் பேரிடர் காலத்தில் அரசுக்கு செயல்பட தெரியவில்லை என்று தானே அர்த்தம்.

* முதல்வரை சந்தித்த மருத்துவ குழு, சென்னையில் மட்டும் ஜூன் இறுதிக்குள் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி பரிசோதனையை அதிகப்படுத்த சொல்லியிருக்கிறது.ஆனால் எண்ணிக்கை கூடும் என்பதால் பரிசோதனையை தவிர்க்கிறது தமிழக அரசு.

* மார்ச் 22ஆம் தேதி தொடங்கி, மே இறுதி வரைக்கும், கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று காலத்தை கடத்திவிட்ட அரசு இனியும் நோயை மறைப்பது தன்னைத் தானே ஏமாற்றி கொள்ளும் ஆபத்து!!

இனி என்ன செய்ய வேண்டும்!!

* பரவாமல் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான காரியங்களை செய்ய வேண்டும்

* களப்பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களை காக்க வேண்டும்

* பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்: அறிகுறி இல்லை என்பதற்காக பாசிட்டிவ் முடிவுகள் வந்தவர்களை வீட்டிற்கு அனுப்பக் கூடாது

* சென்னையில் சிறப்பு கவனம் செலுத்தியாக வேண்டும்: வீடு வீடாக பரிசோதனைகள் செய்ய வேண்டும்

* நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை: கட்டுக்கு அடங்காமல் தான் இருக்கிறது என்பதை அரசு உணர வேண்டும்

மேலும் அவர் அறிக்கையில் தெரிவித்ததாவது: முதலில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட வேண்டும், தினமும் மாலையில் எண்ணிக்கை சொல்வதோடு கடமை முடிந்ததாக நினைக்கக் கூடாது. இதை மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். வரலாற்றில் கடும்பழிக்கு இரையாகாதீர்கள் -இதுவே என் கோரிக்கைகளின் அர்த்தம்..இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin , Corona, Mk. Stalin, Report
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...