கள நிலவரத்துக்கு ஏற்பவே சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்...!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 144  தடை உத்தரவு வரும் 31ம் தேதி வரை அமலில் உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக சலூன் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஊரக பகுதிகளில்  கடந்த 19ம் தேதி சலூன் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. இதைதொடர்ந்து, கடந்த 25-ம் தேதி தமிழகம் முழுவதும்  சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்தது.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச்சங்கத் தலைவர் திரு. முனுசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அப்போது, கிராம பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக திறப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இது குறித்து,  தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் 28-ம் (இன்று)தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும், கள நிலவரங்களை ஆய்வு  செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 8-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: