அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது; கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்

சென்னை : கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பாகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும் என்றும் செய்தியாளர்களை சந்தித்த புவியரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியஸை ஒட்டி இருக்கும் என்றும் புவியரசன் கூறியுள்ளார். அதே நேரம் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 7 செ.மீ. மழையும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 6 செ.மீ. மழையும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related Stories: