சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்; காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை

சென்னை: பட்டம் என்றால் வடசென்னை தான் எல்லோருடைய ஞாபகத்துக்கும் வரும். அவர்களை மிஞ்சி யாரும் பட்டம் விடமுடியாது. அந்த அளவிற்கு காற்றின் திசையை அறிந்து பட்டம் விடுவதில் வல்லவர்கள். பட்டம் சிறுவர்கள் முதல்  பெரியவர்கள் வரை விளையாட்டாகத்தான் விட்டனர். ஆனால் காலப்போக்கில் வடசென்னைஏரியாவில் பட்டம் விடுவதில் யார் பெரியவர் என்பதில் கடும் போட்டி நிலவியது. இதனால் பக்கத்து ஏரியாவில் விடும் பட்டம் தங்களது ஏரியாவில்  பறந்தால் அந்த பட்டத்தை தங்களது பட்டத்தின் மூலமே அறுத்து எறியும் சம்பவங்களும் நடந்து வந்தது. இதற்காகத்தான் பட்டம் விடுவதற்காகவே வடசென்னையில் மஞ்சா நூல் தயாரிக்க அதிகளவில் குடிசை தொழில்கள் உருவானது. பட்டம்  விடுவோர் செல்லமாக அதை ‘காத்தாடி’ என்று தான் அழைப்பார்கள்.

வடசென்னையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசை தொழிலாக பட்டம் மற்றும் அதற்கான மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். கோடை காலம் தொடங்கினால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அதை தங்களுக்கு  சாதகமாக பயன்படுத்தி கொண்டு மாஞ்சா நூல் மூலம் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் பட்டம் விடுவார்கள். காற்றின் வேகம், மற்றும் அருகில் உள்ள பட்டம் அறுத்தால் பட்டத்தின் உரிமையாளருக்கு இன்றும் சன்மானம் வழங்கப்பட்டு  வருகிறது. இதனால் பலர் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக அமைந்தது. பட்டம் விடுவதில் ஏற்பட்ட போட்டியால் வடசென்னையில் கொலைகளும் நடந்துள்ளது. அந்த அளவிற்கு வாலிபர்கள் வெறித்தனமாக  பட்டம் விட்டு தங்களது ஏரியா கெத்தை பல ஆண்டுகளாக காட்டி வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கு முன்பு கூட மாஞ்சா நூல் கழுத்து அறுத்து சிலர் இறந்துள்ளனர். பலரது கை விரல்கள் துண்டாகி சிறு காயங்களுடன் உயிர் தப்பியும் உள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு பெரம்பூரில் தந்தையுடன் பைக்கில் சென்ற அஜய்(5) என்ற  சிறுவன் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்து துடிதுடித்து உயிரிழந்தான். இந்த சம்பவம்தான் சென்னையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 175 பேரை போலீசார் கைது செய்தனர். மாஞ்சா நூல்  மற்றும் பட்டம் தயாரித்த தொழில் சாலை கண்டுபிடிக்கப்பட்டு மூடப்பட்டது. அதேபோல் விற்பனையும் முற்றிலும் தடைசெய்யப்பட்டது. இருப்பினும், மாஞ்சா நூலால் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் வந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு வியாசர்பாடியை சேர்ந்த பகீர் பாஷா என்பவர் மனைவி, குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டது. தொடர்நது,  எம்.கே.பி. நகரில், மாஞ்சா நூலில் பட்டம் பறக்கவிட்டிருந்த தினேஷ் குமார் என்பவரை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். மேலும், அமேசான் ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் மாஞ்சா நூல், காற்றாடி வாங்கியதாக தினேஷ்குமார்  கூறியதால் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மாஞ்சா நூல் மூலம்  பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் பொருட்கள்:

மாஞ்சா நூல் தயாரிக்க மூலப்பொருட்களாக, நன்கு அரைக்கப்பட்ட கண்ணாடி துகள்கள், நூல், வஜ்ரம், ஊமத்தம் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலப்பொருட்கள் ஊமத்தம் பாலில் சிறிது நேரம் ஊறவைத்து நூலை காயவைத்தால் மாஞ்சா  நூல் தயார். இப்படி தயாரிக்கும் மாஞ்சா நூல் நீளத்திற்கு ஏற்றப்படி ரூ.300 முதல் ரூ.2,500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: