×

வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது...ஐகோர்ட்டில் பதில் மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு..

சென்னை: வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நளினி தாயார் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச கைதிகளை அனுமதிக்க சிறை விதிகளில் இடமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுச் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடமும், இங்கிலாந்தில் உள்ள மூத்த சகோதரியிடமும் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் 2 வாரத்திற்கு முன்னர் இயற்கை எய்திய தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நளினி மற்றும் முருகன் அவர்களுடைய உறவினர்களுடன் பேசினால் அதில் அரசுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பியது. மேலும் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச கைதிகளை அனுமதிக்க சிறை விதிகளில் இடமில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nalini ,Murugan ,countries ,relatives , Nalini, Murugan, HighCourt, Tamil Nadu Govt
× RELATED முருகன், நளினி உறவினர்களுடன் பேச...