×

ஆழியாற்றில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனபோக்கு: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரானது ஆனைமலை, அம்பராம்பாளையம் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி, மணக்கடவு  வழியாக கேரளாவுக்கு சென்றடைகிறது. ஆழியாற்றில் செல்லும்  தண்ணீர் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும்  பயன்படுகிறது. ஆனால், ஆனைமலை, அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி உள்ளிட்ட கிராம பகுதியிலுள்ள குடியிருப்புகளில் வெளியேறும் கழிவுநீர், ஓடை வழியாக சென்று, ஆழியாற்றில் கலக்கிறது. இதில், கழிவுநீர் கலக்கும் ஆனைமலை பாலம் அருகே மற்றும் ஆங்காங்கே புதர்சூழ்ந்த இடம்போல் ஆகாய தாமரை அதிகளவு படந்துள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆகாயதாமரை படர்ந்திருப்பதால், அப்பகுதியில் கொசு உற்பத்தி அதிகரிப்பதாக புகார் எழுகிறது. ஆழியாற்றில் கலக்கும் கழிவுநீர் மட்டுமின்றி, அவ்வப்போது பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக்கழிவு, கோழிக்கழிவு, குப்பை கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவது தொடர்வதால், வரும் காலங்களில் தண்ணீர் மாசுபடிவதுடன், குடிநீர் தேவைக்கும் விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என்ற அவலம் ஏற்படுகிறது

 ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதை தவிர்த்து, அதற்கு தகுந்தார்போல் மாற்றுவழி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். மேலும், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் முறையீட்டு கூட்டத்தின்போதும், விவசாயிகள் பலர் ஆழியாற்றில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று தொடர்ந்து புகார் தெரிவித்து தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.  ஆனால், அவ்வப்போது அதிகாரிகள் நேரில் வந்து, கழிவுநீர் கலப்பது குறித்தும் ஆய்வு செய்து செல்வதை தவிர ஆகாய தாமரையை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து கிடப்பில் போட்டுள்ளனர். ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொதுப்பணியினர் செயல்பாட்டால், ஆழியாற்றில் தொடர்ந்து பல மாதங்களாக படர்ந்திருக்கும் ஆகாய தாமரை அகற்றப்படாமலும், கழிவுநீர் கலப்பதை தடுக்காமல் கண்துடைப்பிற்காக ஆய்வு செய்துவிட்டு மெத்தனபோக்கில் இருப்பதால், குடிநீர் தேவைக்கு மட்டுமின்றி விவசாயத்துக்கும் பயன்படும் ஆழியாற்று தண்ணீர் மாசுப்படும் அவலநிலை உண்டாகும் என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


Tags : Officials , removing , deep tide, Farmer agony
× RELATED 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்:...