மூலிகை குணம் கொண்ட பாரம்பரிய ஊதா நிற 'சின்னார்'நெற்பயிர்களை விளைவிக்கும் புதுச்சேரி பட்டதாரி!!.. குவியும் பாராட்டுக்கள்!!

புதுச்சேரி : நெற்பயிர் பச்சை நிறத்தில் இருப்பது வழக்கமானது. ஆனால் ஊதா நிறத்தில் வளர்ந்துள்ள நெற்பயிர் பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளது. புதுச்சேரி மாநிலம் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியை ஒட்டியுள்ள கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார்,மென்பொருள் பொறியியல் படித்து விட்டு விவசாயப் பணிகளைச் செய்து வருகிறார். அவரது நிலத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிரைப் பார்த்தால் பலரும் வியக்கின்றனர். வழக்கமாக பச்சை நிறத்தில் காணப்படும் நெற்பயிற்கள் இவர் நிலத்தில் கருமையான ஊதா நிறத்தில் உள்ளன.

பாரம்பரியமான சின்னார் என்ற இந்த நெல் வகை மூலிகை சக்தி கொண்டது. 135 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், அதிக காற்று வீசினாலும் சாய்வது இல்லை என்று விவசாயி விஜய் குமார் தெரிவித்துள்ளார். பரமக்குடி முதுகுளத்தூரின் கீழ்மானங்கரை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பம் என்பவர், ஆடுதுறை ரக விதை நெல்லைப் பயிரிட்டபோது பச்சை நிறப் பயிர்களுக்கு நடுவில், கத்தரி ஊதா நிறத்தில் ஒரு பயிர் இருந்தது. அறுவடையின்போது ரோஜா நிறத்தில் மாறியது.இதைத் தனியாக அறுவடை செய்து மீண்டும் பயிர் செய்துள்ளனர். அங்கிருந்து  வாங்கி வந்து சின்னார் ரக நெல்லை பயிர் செய்ததாக விஜய குமார் தெரிவித்துள்ளார். ரசாயனம் போடாமல் இயற்கை விவசாயம் செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: