பக்தர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்: திருப்பதி கோவில் சொத்துக்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிடுங்க...அறங்காவலர் குழு தலைவரிடம் வலியுறுத்தல்

திருமலை: ஆந்திர மாநிலம்  திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். நாட்டிலேயே அதிக வருவாய் கொண்ட கோவில்களில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும், இந்த  கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், நேர்த்திக்கடனை நிறைவேற்ற, தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பணம், நிலம் மற்றும் இதர பொருட்களை காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். நாள்தோறும் அவர்கள் செலுத்தும்  காணிக்கைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, நிர்வாகச் செலவுகள் போக மீதமுள்ளவற்றை வங்கியில் வைப்புநிதியாக தேவஸ்தானம் சேமித்து வைத்து வருகிறது.

தேசிய மையமாக்கப்பட்ட சில வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றிலும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்யப்பட்ட இருப்பு தொகை 12,000 கோடியை தாண்டியுள்ளது. இதிலிருந்து சுமார் 845 கோடி ரூபாய்  வட்டி ஆண்டுக்கு கிடைத்து வருகிறது. காணிக்கையாக கிடைத்த தங்கமும் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆந்திரா மற்றும் தமிழகத்தில் விழுப்புரம், திருவள்ளூர், குடியாத்தம்  உட்பட பல இடங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், காலிமனைகள் உள்ளிட்ட ரூ.23.92 கோடி சொத்துக்களை விற்க முடிவு  செய்யப்பட்டது. ஆனால், இந்து மத தலைவர்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள், எதிர்க்கட்சியான  தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பக்தர்கள் சேவா சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த முடிவு கைவிடப்பட்டது.  

இந்நிலையில், அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டிக்கு அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி எழுதிய கடிதத்தில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய அசையா சொத்துக்கள் விவரங்களை பொதுமக்கள்  பார்வைக்கு தேவஸ்தான இணையதளத்தில் வைக்க வேண்டும். நன்கொடை வழங்கிய பக்தர்களின் பெயர், ஊர், நிலம், வீடு, கடை போன்ற விவரங்கள், எந்த இடத்தில் உள்ளது போன்ற முழு தகவல்களையும் இணையதளத்தில் வைக்கப்பட  வேண்டும். இதனால் தேவஸ்தானத்தின் மீது பக்தர்களுக்கு நம்பிக்கையும் வெளிப்படைத் தன்மையும் ஏற்படும். எனவே இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: