திருவள்ளூரில் 4 மையங்கள் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் 2,040 ஆசிரியர்கள்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 4 மையங்களில் 2,040 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று 27ம் தேதி முதல் துவங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்காக, விடைத்தாள் திருத்தும் மையங்களை தயார் நிலையில் வைக்க அரசு அறிவுறுத்தியது.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் விடைத்தாள் திருத்துவது கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இப்பணிகள் போலிவாக்கம் விஷ்வக்சேனா மெட்ரிக் பள்ளி, செங்குன்றம் சில்ரன்ஸ் பாரடைஸ் மெட்ரிக் பள்ளி, திருத்தணி விஜிஎஸ் நாயுடு மெட்ரிக் பள்ளி, செங்குன்றம் ஆல்பா மெட்ரிக் பள்ளி என 4 மையங்களில் நேற்று துவங்கியது.இதில் 255 முதன்மை தேர்வாளர்கள், 255 கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில், 1,530 உதவி தேர்வாளர்கள் என விடைத்தாள் திருத்தும் பணியில் மொத்தம் 2,040 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: