நன்னடத்தை விதிகளை மீறிய பிரபல ரவுடிக்கு 290 நாள் சிறை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாமல்லன் நகர், கேடிஎஸ் மணி தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவரது மகன் ராஜா (எ) வசூல் ராஜா. பிரபல ரவுடி. இவர் மீது காஞ்சி தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 17க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ராஜா மீது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக எஸ்பி சாமுண்டீஸ்வரிக்கு தொடர்ந்து புகார் சென்றது. இதையடுத்து எஸ்பி, ராஜா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து கடந்த மார்ச் 13ம் தேதி ரவுடி ராஜாவை, காஞ்சிபுரம் உட்கோட்ட நிர்வாக நடுவர் மற்றும் சப் ஆட்சியர் சரவணன் முன்பு ஆஜர்படுத்தி, ஒரு ஆண்டுக்கு நன்னடத்தைக்கான பிணையப்பத்திரம் மற்றும் 25 ஆயிரம் அபராதம் நிர்ணயம் செய்து உத்தரவு பெறப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் ரவுடி ராஜா, திருக்காலிமேடு குப்பைமேடு அருகில் கஞ்சா வைத்திருந்தாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜா மீது நன்னடத்தை பத்திரம் நடைமுறையில் இருக்கும்போது, மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டதால், அவரை கைது செய்து 2021 மார்ச் 12ம் தேதி வரை மதுராந்தகம் கிளை சிறையில் அடைக்க சப் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories: