×

ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் பரபரப்பு கொரோனா நோயாளி தற்கொலை: தொடரும் சம்பவங்களால் நோயாளிகள் அதிர்ச்சி

சென்னை: ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் கிளார்க், மருத்துவமனை கழிவறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னையில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரித்துக் கொண்டு வரும் நிலையில் மற்றொரு புறம் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாதவரம் அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியை சேர்ந்த 50 வயதான நபருக்கு கடந்த 25ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறப்பு வார்டில் உள்ள கழிவறைக்கு சென்ற அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் சென்னையில் மற்றொரு தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 57 வயது மதிக்கத்தக்க நபர். கடந்த வாரம் கொரோனா பாதிப்பால் ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு நோய் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் உள்ள தனது அறையில் இருந்து வெளியே சென்ற அவர், வெகு நேரமாகியும் அறைக்கு திரும்ப  வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர் வெளியே சென்று விட்டாரா என்ற கோணத்தில் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடினர். அவர் எங்கும் கிடைக்க வில்லை. பின்னர் கழிவறை ஒன்று வெகு நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்த போது மாயமான கொரோனா நோயாளி தனது துண்டால் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் மனஉளைச்சல் காரணமாக தற்ெகாலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் மனஉளைச்சல் காரணமாக தான் தற்ெகாலை செய்து கொண்டரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்று டாக்டர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Coronal Patient Suicide ,Incidents ,Omanthur Pulpoku Government Hospital ,patient suicide ,government hospital ,paramedic , Omanthurr Multicultural Government Hospital, Corona Patient, Suicide, Patients
× RELATED பவானி சுற்று வட்டாரத்தில் கொளுத்தும்...