×

முகக்கவசம் அணியாத டிரம்ப் ஒரு முழு முட்டாள்: ஜோ பிடென் தாக்குதல்

வாஷிங்டன்: ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு முழு முட்டாள்,’’ என்று ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பிடென் விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் டெலாவேரில் உள்ள போர் வீரர் மகள் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த மனைவியுடன் வந்த ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளராக போட்டியிட உள்ள ஜோ பிடென் முகக்கவசம் அணிந்து இருந்தார். பின்பு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், `‘முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவழைக்கும் அதிபர் டிரம்ப் ஒரு முழு முட்டாள். அவரது கவனக்குறைவு, கர்வம் ஆகியவற்றினால் தான் அமெரிக்கா ஒரு லட்சம் உயிர்களை கொரோனாவுக்கு பலி கொடுத்துள்ளது,’’ என்று கூறினார்.

இதனிடையே இதற்கு பதிலளித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ``வீட்டில் இருக்கும் போது பிடென் முகக்கவசம் அணிய தேவையில்லை. வெளியில் வரும் போது அதுவும் மனைவியுடன் அவர் வெளியில் வந்ததால் முகக்கவசம் அணிந்துள்ளார். நான் அவரை விமர்சிக்கவில்லை. வீட்டில் இருக்கும் போது முகக்–்கவசம் அணியுங்கள் என்று அரசு பரிந்துரைக்கவில்லை,’’ என்று கூறினார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கெய்லே மெக்னானி கூறுகையில், ``நேற்று முன்தினம் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி உள்பட பல ஆன்லைன் நிகழ்ச்சிகளில் பிடென் முகக் கவசம் அணியாமல் பங்கேற்றுள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் முகக்கவசத்துடன் கலந்து கொண்டார். வீட்டை விட்டு வெளியேறிய போது மனைவியுடன் நெருக்கமாக நின்றிருந்தார். பொதுவெளியில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. அவரது நடவடிக்கைகள் முற்றிலும் முரண்பாடாக உள்ளன,’’ என்று தெரிவித்தார். இதனிடையே, அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாக்குசாவடிக்கு சென்று வாக்களிக்க அஞ்சுவதால் தபால் மூலம் ஓட்டு போட நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து பேசிய டிரம்ப், ஜனநாயக கட்சியினர் ஆளும் கலிபோர்னியா, மிச்சிகன் உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் தபால் ஓட்டு முறைகேட்டில் ஈடுபட வாய்ப்புள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், `2020 அதிபர் தேர்தலில் டிவிட்டர் தலையிடுகிறது. தபால் ஓட்டுகள் குறித்த எனது பேச்சை `உண்மையை கண்டறியுங்கள்’ என்ற தலைப்பின் கீழ், சிஎன்என், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் போலி செய்திகளை வைத்து எனது டிவீட் நம்பகத்தன்மையற்றது என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், பேச்சுரிமையின் சுதந்திரம் முற்றிலும் முடக்கப்படுகிறது. நான் அதிபராக இருக்கும் வரை இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

நம்பகத்தன்மையற்ற டிவீட்
சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க டிவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இரண்டு டிவிட்டர் பதிவுகள் நம்பகத்தன்மையற்றது என டிவிட்டர் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிர்வாகம் கூறுகையில், ‘அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகள் நிர்வாகத்தின் விதிகளை மீறவில்லை என்றாலும் அவர் கூறிய கருத்து நம்பகத்தன்மையற்றதாக இருந்ததால், பயனர்கள் அதுகுறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என விளக்கம் அளித்துள்ளது.

Tags : Joe Biden ,attack , Faceplant, Trump, complete idiot, Joe Biden
× RELATED மாஸ் காட்டியவர்...மாஸ்க் மாட்டினார்......