×

காஷ்மீரில் விநோத சம்பவம் எஜமானரை சுமந்து வந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட குதிரை

ஜம்மு: வீட்டில் தனிமைப்படுத்துதல் என்ற வார்த்தை கொரோனாவால் பிரபலமாகி உள்ளது. இதுவரை மனிதர்கள் தான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது, முதல் முறையாக ஒரு குதிரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த விநோத சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது.  காஷ்மீரின் சோபியான் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளாக உள்ளன. இங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ரஜோரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோபியான் மாவட்டத்தில் இருந்து தனது குதிரையில் சவாரி செய்த படி ரஜோரிக்கு வந்துள்ளார். இவர் அதிகாரிகளிடம் எந்த முன்அனுமதியும் பெறவில்லை.

கடந்த திங்கட்கிழமை இரவு குதிரையில் புறப்பட்ட அந்த நபர் முகல் சாலை வழியாக ரஜோரியை வந்தடைந்துள்ளார். கடும் குளிர் காரணமாக அந்த சாலை மூடப்பட்ட நிலையில், எந்த வாகன தொந்தரவும் இல்லாமல் குதிரையில் ஹாயாக சவாரி செய்துள்ளார். பச்சை மண்டலமான ரஜோரியை வந்தடைந்ததும் மாவட்ட எல்லையிலேயே அவரை போலீசார் அலேக்காக பிடித்தனர். உடனே, குதிரையையும், எஜமானரையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் முடிவு வரும் வரை எஜமானர், தனிமை வார்டில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிக்கை வரும் வரை வீட்டில் மற்ற விலங்குகளிடமிருந்து குதிரையை தனிமைப்படுத்தி வைக்க வேண்டுமென அதன் எஜமானரின் குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாயில் பாலிதீன் போட்டு மூடப்பட்ட நிலையில், லாடத்தில் தனியாக கட்டி, ‘ஹோம் குவாரன்டைனில்’ குதிரை தற்போது தனது உணவுகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது.

Tags : incident ,masters ,Kashmir , Kashmir, master, horse, corona, curfew
× RELATED சில்லி பாயின்ட்…