×

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பின காவலாளியை தரையில் தள்ளி கழுத்தில் காலால் மிதித்து கொன்ற போலீஸ்: அமெரிக்காவில் வைரலாகும் வீடியோ

மின்னியாபோலிஸ்: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பினத்தை சேர்ந்த காவலாளியை கழுத்தில் போலீஸ்காரர் காலால் மிதித்து கொலை செய்யும் காட்சி வைரலாக பரவி வருகிறது.  அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தில் உள்ள நகரம் மின்னியாபோலிஸ். இங்குள்ள விடுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் ஜார்ஜ் பிளேய்ட் (46). கருப்பின அமெரிக்கர். மளிகை கடை ஒன்றில் மோசடி செய்த வழக்கில் ஜார்ஜை கடந்த 25ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, அமெரிக்க எப்பிஐ.யிடம் இது தொடர்பான விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் அதிகாரிகள், அவரை காலால் மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்கில் வீடியோ ஒன்று வைரலாக பரவியது. அதில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜை வெள்ளைகார அதிகாரி ஒருவர் காரில் இருந்து இறக்குகிறார். சட்டை அணியாமல் இருக்கும் ஜார்ஜை கீழே தள்ளி அவரது கழுத்தில் தனது முட்டிக்காலால் 5 நிமிடங்கள் வரை அழுத்துகிறார்.

அப்போது `சார் என்னால் மூச்சு விட முடியவில்லை’ `கழுத்தில் இருந்து காலை எடுங்கள்’ என கத்துகிறார் ஜார்ஜ். அதை அலட்சியப்படுத்தி தொடர்ந்து மிதித்த வண்ணம் இருக்கிறார் போலீஸ்காரர். அப்போது ஜார்ஜ் தனது தாய்க்கு போன் செய்து என்னை போலீஸ்காரர் காலால் அழுத்தி இருப்பதால் என்னால் மூச்சு விட முடியவில்லை என கூறுகிறார். அப்போது அருகே இருந்தவர்கள் சார் அவரால் மூச்சு விட முடியவில்லை. காலை கழுத்தில் இருந்து எடுங்கள் என கூறுகின்றனர். அதையும் பொருட்படுத்தாத அந்த போலீஸ் அதிகாரி அவர் தாயிடம் போனில் பேசுவதால் அவர் நன்றாக மூச்சுவிட்டபடி தான் உள்ளார் என பதிலளிக்கிறார்.

அப்போது, ஜார்ஜ் திடீரென  மூச்சு விட முடியாத நிலையில் ரத்தம் கசிந்து இறக்கிறார். இதை அங்கிருந்தவர்கள் கடுமையாக எதிர்த்தும் அதை போலீசார் கண்டு கொள்ளவில்ைல. இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் உலகளவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில், காவலாளி சாவுக்கு காரணமான 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.


Tags : policeman ,guards ,ground , Fraud, Arrest, Guard, Murder, Police, USA
× RELATED கொரோனா பாதிப்பால் உயிரிழந்த...