×

இந்திய - சீன படைகள் குவிப்பு: லடாக் எல்லையில் போர் பதற்றம்: ராணுவ தளபதி முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: லடாக் எல்லையில் 3 கிமீ ஊடுருவிய சீனா, தனது படைகளை அங்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவும் பதிலடி தர தயாராகி வருகிறது. இதனால், லடாக் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா இடையே வரையறுக்கப்படாத 3,500 கிமீ எல்லை அமைந்துள்ளது. காரகோரம் கணவாயில் இந்திய ராணுவ சாவடி அமைந்துள்ள தவுலத் பெக் ஹோல்டியில் இந்தியா பாலம் அமைப்பதை சீனா எதிர்த்து வருகிறது. இதனால், இந்தியா - சீனா இடையே மீண்டும் எல்லை பிரச்னை முற்றியுள்ளது. லடாக்கின் பாங்கோங் திசோ, தவுலவத் பெக் ஹோல்டி, தெம்சோக் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய 4 இடங்களில் இரு நாட்டு படைகளும் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன.

இங்கு சீனா தனது எல்லைக்குள் சுமார் 5 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளது. அதோடு, அங்கு தனது ராணுவ விமானப்படை தளத்தை விரிவுபடுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான சில செயற்கைகோள் படங்களும் வெளியாகி உள்ளது. இதற்கு பதிலடி தர இந்தியாவும் தனது படைகளை அப்பகுதியில் குவித்துள்ளது. சீனா எவ்வளவு மிரட்டினாலும் தவுலத் பெக் பகுதியில் பாலம் அமைப்பதில் இருந்து இந்தியா பின்வாங்காது என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. லடாக்கில் சுமார் 3 கிமீ தூரம் வரை சீன படைகள் ஊடுருவி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக லடாக் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் ராணுவ தளபதி நாரவனே தலைமையில் டெல்லியில் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் லடாக் எல்லை விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் லடாக் எல்லை விவகாரத்தில் இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமரசம் செய்ய தயார்: டிரம்ப்
இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் முற்றியிருக்கும் நிலையில், இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எல்லை பிரச்னையில் சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பது பற்றி இந்தியா, சீனாவிடம் தெரிவித்துள்ளோம்,’ என கூறி உள்ளார். ஏற்கனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் கூறினார். இதில் மூன்றாம் தரப்பு இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Indian ,forces ,Chinese ,Ladakh ,border , India, China, forces, Ladakh border, army commander
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...