கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் ஆபத்து: சென்னையில் 2 லட்சத்தை தாண்டும்: தமிழக அரசுக்கு திடீர் எச்சரிக்கை

* பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவு

* தமிழகத்தில் இதுவரை 18,545 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* 42 அரசு மற்றும் 28 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.

* இதுவரை 9,909 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

* இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: சென்னையில் 2 லட்சம் பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ குழு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில், மருத்துவ நிபுணர்கள் குழு  சென்னையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்காவிட்டால் ஜூன் மாத இறுதிக்குள் பாதிக்கப்பட்டோரின்

எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என எச்சரித்துள்ளது. சென்னையில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையில் அரசு மருத்துவமனைகளில் டெஸ்ட் எடுக்கிறோம். தனியார் மருத்துவமனைகளிலும் சிலர் டெஸ்ட் எடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு தகவல் தெரிவதற்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு முடிவுகள் வந்து விடுகின்றன. இதனால் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்கள், நேரடியாக தங்கள் வாகனத்தில் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனாலும், அவர்களை ஆம்புலன்சில் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னையை மற்ற 36 மாவட்டங்களுடன் ஒப்பிடக் கூடாது. சென்னையில் ஒரு கோடி மக்கள் வசிக்கின்றனர். நகரைப் பொறுத்தவரை மேல் பகுதியான திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்கள், கீழ் பகுதிகளான தென் சென்னை பகுதிகளில் நோய் தொற்று குறைவு. மத்தியப் பகுதியான 15 மண்டலத்துக்கும் தனித்தனி ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மாநகராட்சி கமிஷனருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கோடம்பாக்கம், அண்ணாநகர் பகுதிகளில் தொற்று அதிகம் என்பதால், அந்தப் பகுதிகளில் நுணுக்கமாக  கண்காணிக்கிறோம். ஒரு லட்சம் முதியோர்கள் மருத்துவமனை வரும்போதும், அவர்களுக்கும் சரியான சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம்.

நோய் வராமல் தடுக்க, முக கவசம் அணிய வேண்டும், கை கழுவ வேண்டும், தள்ளி நிற்க வேண்டும். முதியோர்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். இதை யாரும் கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் பெரிய பிரச்னையாக உள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் கூட 15 சதவீதம் பேர் கடைப்பிடிப்பதில்லை. நாங்கள் விழிப்புணர்வு செய்கிறோம். சர்தார்ஜி தலைப்பாகை கட்டுவதுபோல முகக் கவசம் அவசியம். ஐசிஎம்ஆர் விதிகளின்படி தான் பரிசோதனை நடத்துகிறோம். சென்னையில் டெஸ்ட்களை குறைக்கவில்லை. ராயபுரத்தில் கூடுதலாக டெஸ்ட் நடத்துகிறோம். சராசரியாக 3700 டெஸ்ட் செய்கிறோம். நகர்ப்புறத்தில் சென்னையில்தான் பரிசோதனை ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு செய்துள்ளோம். கேரளாவில் 45 ஆயிரம் டெஸ்ட்தான் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒரு லட்சம் டெஸ்ட் செய்துள்ளோம்.

நம் முன்னோர்கள் மூலிகைகளைத்தான் சாப்பிட்டார்கள். அதை நாம் புறந்தள்ள முடியாது. நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு வருவதற்கான முயற்சிதான் சித்தா மற்றும் ஆயுர்வேதம். இதனால் பாதிப்பு கிடையாது. பாதுகாப்பு ஏற்படுத்துகிறது. எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. வைட்டமின் சி முக்கியம். பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். பொதுமக்களிடம் தேவையற்ற அச்சம் வேண்டாம். பீதி அடைய வேண்டாம். முதியவர்களை பொறுத்தவரை அரசு சொல்கிற வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகள்தான் முக்கியம். நாங்கள் கண்காணிப்பையும், தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்துகிறோம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி, ‘‘தற்போது சென்னையில் 458 தடை செய்யப்பட்ட பகுதிகள் உள்ளன. 750க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடை நீக்கப்பட்டுள்ளது. 28 நாட்களில் புதிய தொற்று ஏற்படாமல் இருந்தால் மட்டுமே ஒரு பகுதியில் தடை நீக்கப்படும். 1250 ஆக இருந்த தடை செய்யப்பட்ட பகுதிகள் தற்போது படிப் படியாக குறைந்துள்ளது. நோய் தொற்று சென்னையில் கட்டுக்குள் வருவதற்கு இது உதாரணம்’’ என்றார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசு வௌியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 11,231 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 558 பேருக்கும், அரியலூர் 4, செங்கல்பட்டு 31, கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், கள்ளக்குறிச்சி, மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கும், காஞ்சிபுரம் 14, திருவள்ளூர் 40, திருவண்ணாமலை 13, திருவாரூர் 5, திருச்சி 3 என 678 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாரஷ்டிராவில் இருந்து வந்த 138 பேர் என கேரளாவில் இருந்து வந்த ஒரு நபர் என 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று தமிழகத்தில் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 508 ஆண்கள், 309 பெண்கள். தமிழகத்தில் இதுவரை 18,545 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பரிசோதனை மையத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இப்போது, 42 அரசு மற்றும் 28 தனியார் பரிசோதனை மையங்கள் என 70 அனுமதி பெற்று செயல்படுகின்றன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 567 பேர் குணமாகினர்.. அதன்படி தமிழகத்தில் இதுவரை 9,909 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மேலும் 8,500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும்  செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 74 வயது பெண், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சென்னையை சேர்ந்த 78 வயது பெண், 54 வயது பெண், திருவள்ளூரை சேர்ந்த 51 வயது ஆண், சென்னையை சேர்ந்த 39 வயது ஆண், 79 வயது ஆண் என 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 650 மாதிரிகள் முடிவுகள் வரவேண்டியுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவால் தமிழகத்தில் அதிகரிப்பு:

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்களால் தினமும் கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று மகாரஷ்டிராவில் இருந்து தமிழகத்துக்கு 138 பேர், கேரளாவில் இருந்து வந்த 1 நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: