சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்: தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இதையடுத்து இன்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்றும், 19 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வாரமாக வானிலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் வங்கக் கடலில் ஒரு புயல் உருவாகி, வட மேற்கு திசையில் கடந்து சென்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒரு வறண்ட வானிலை காணப்படுகிறது. அதனால் 25, 26ம் தேதிகளில் வட மாநிலங்கள் சிலவற்றில் 45 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பு எச்சரித்தது.

இந்த அறிவிப்புக்கு ஏற்ப வட மாநிலங்களில் சிலவற்றில் நேற்று கடுமையான வெயில் வாட்டி எடுத்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த வெயிலின் அளவு அதே நிலையில் இருக்கும். வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெப்ப தாக்கம் தமிழகத்திலும் பரவியுள்ளது. அதற்கேற்ப நான்கு நாட்களாக தமிழகத்தில் வெயிலின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் 109 டிகிரி வரை உயர்ந்தது. நேற்று வேலூர், திருச்சி, திருத்தணி, கரூர், மாவட்டங்களில் 108 டிகிரி அளவு வெயில் இருந்தது.  ஈரோடு, சேலம், மதுரை 106 டிகிரி, திருப்பத்தூர், பாளையங்கோட்டை, தர்மபுரி 102 டிகிரி, சென்னை உள்ளிட்ட  பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

மேலும் வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யும்.  மேலும், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருத்தணி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை 42 செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது அனல் காற்று வீசும். அதன் 2 நாட்களுக்கு பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Related Stories: