×

மருத்துவக்கல்வி பறிக்கப்பட்ட 10,000 இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக தர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கடந்த 3 ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான   27 சதவீதம் இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.இதனால் 10,000 இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது.  இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது மிகப்பெரிய சமூக அநீதி என்பதிலோ, அந்த இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய பத்தாயிரத்திற்கும் கூடுதலான இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன என்பதிலோ யாருக்கும் எந்த ஐயமும் இருக்க வாய்ப்பில்லை.

இந்த வழக்கில் விசாரணை நடத்தாமலேயே தீர்ப்பளிக்கும் அளவுக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ஒருவேளை மத்திய சுகாதார அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய அரசின் கொள்கைப்படி 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். 27 சதவீதம் ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

நடப்பாண்டுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.  அதேபோல், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஓபிசி மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்களை பின்னடைவு  இடங்களாக அறிவித்து, அதே எண்ணிக்கையிலான கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Ramadas , Medical Education, Special Provision, Ramadas
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்