வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை அழைத்து வர நடவடிக்கை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

* சவூதி அரேபியாவின் பல பகுதிகளிலிருந்தும் தாயகம் திரும்புவதற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் விண்ணப்பித்திருந்தும் ஒரு சேவை கூட ஒதுக்கப்படாதது சவூதி வாழ் தமிழர்களை அதிர்ச்சிகுள்ளாக்கி உள்ளது.

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட  அறிக்கை:  வளைகுடா நாடுகளில் ஏறத்தாழ  85 லட்சம் இந்தியர்கள்  பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிற மருத்துவ சிகிச்சையை  புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வளைகுடா நாடுகளின் அரசுகள் வழங்குவதில்லை. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக இந்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. முதல் 2 வார அட்டவணை வெளியானதில் சவூதியிலுள்ள தமிழர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை அறிந்து மிகுந்த மனவேதனை கொள்கின்றனர்.

முதல்வாரத்தில் மொத்தம் 64 சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் 25 சேவைகள் வளைகுடா நாடுகளிலிருந்து தாயகம் திரும்புவர்களுக்காக ஒதுக்கப்பட்டுளளன என்றாலும் இவற்றில் தமிழகத்திற்கான ஒதுக்கீடு வெறும் 4 சேவைகள் மட்டுமே. அவையும் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், குவைத் ஆகிய நாடுகளுக்கானவையே. சவூதி பக்ரைன் கத்தார் நாடுகளில் வாழும் தமிழர்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சவூதி அரேபியாவின் பல பகுதிகளிலிருந்தும் தாயகம் திரும்புவதற்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் விண்ணப்பித்திருந்தும் ஒரு சேவை கூட ஒதுக்கப்படாதது சவூதி வாழ் தமிழர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

மேலும் 2ம் வாரத்தில் 109 சேவைகள் திட்டமிடப்பட்டிருந்தாலும் சவூதிக்காக இயக்கப்படவுள்ளது வெறும் 6 விமானம் மட்டுமே. எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உடனடியாக தொடர்பு கொண்டு வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை விமானம், கப்பல் வழியாக உடனடியாக தமிழகம் அழைத்துவர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: