கொரோனா நிவாரண நிதி எவ்வளவு வந்தது?தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு என்று தெரிவிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மக்களும் தங்களால் முடிந்த பங்களிப்பை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் இவ்வாறு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது போன்ற எந்த விவரங்களும் இணையத்தில் வெளியிடப்படவில்லை. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான இணையத்தில் கடந்த மார்ச் முதல் 38 ஆயிரத்து 849 பரிவர்த்தனைகள் மூலமாக 20.47 கோடி  நிதியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நாளிதழ்களில் முதல்வரின் பொது நிவாரண நிதி மூலமாக 306.42 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை பெறப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். பின்னர்  இதுதொடர்பாக தமிழக அரசு வரும் ஜூன் 4க்குள் பதிலளிக்க வேண்டும் என  உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: