7,700 செவிலியரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2015ல் பணியில் சேர்ந்த செவிலியர்களில் இன்னும் சுமார் 7,700 பேர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதால் மன வேதனையில் இருக்கிறார்கள்.   இவர்களின் பிரதான கோரிக்கையே சமவேலை செய்யும் போது சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்ல பணிக்கு சேரும் போதே 2 வருடம் முடிந்த பிறகு தொகுப்பு ஊதியத்திலிருந்து காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அரசின் உறுதியும் கேள்விக்குறியாக இருப்பதும் கவனத்துக்குரியது. அந்த தொகுப்பூதியமும் மாதம் தோறும் 5ம் தேதிக்குள் வழங்கப்படவில்லை என்ற குறையும் உள்ளது.

அதே போல தொகுப்பூதிய செவிலியர்களுக்கு உரிய மருத்துவப்படி, வீட்டு வாடகைப்படி, அகவிலைப்படி மற்றும் விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அனைத்து செவிலியர்களுக்கும் தமிழக அரசு ஒரு மாத சம்பளம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தும் அதுவும் இன்னும் முறையாக கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.  இத்தகைய அசாதாரண சூழலில் தமிழக அரசு முதற்கட்டமாக 2015ல் பணியில் சேர்ந்து இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ள செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்வது இப்போதைய கொரோனா காலத்தில் மட்டுமல்ல அவர்கள் உள்ளிட்ட அனைத்து செவிலியர்களுக்கும் வருங்கால வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அமையும்.

Related Stories: