இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று மோதல்: காடுவெட்டி குரு மகன், மருமகன்களை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி: அரியலூர் அருகே பதற்றம், போலீஸ் குவிப்பு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.குரு. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க தலைவருமான இவர், மறைந்து 2 ஆண்டுகள் ஆகிறது. அவரது இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்றுமுன்தினம் அனுசரிக்கப்பட்டது. ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருப்பதன் காரணமாக குருவின் குடும்பத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியில் முடிந்ததும் குருவின் உறவினர்கள் காடுவெட்டி கிராமத்தில் தங்கியிருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு குருவின் மகன் கனலரசனின் நண்பரான அருண்குமாரை சிலர் தாக்கினர்.

இதில் காயத்துடன் அருண்குமார் சத்தம் போட்டுக் கொண்டே கனலரசன் வீட்டிற்கு ஓடி வந்தார். அவரது சத்தத்தை கேட்டு கனலரசன், குருவின் மருமகன் மனோஜ்கிரன், அவரது சகோதரர் மதன் ஆகியோர் வெளியில் ஓடிவந்தனர். அப்போது அருண்குமாரை தாக்கியவர்கள் அவர்கள் மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதில் சுதாரித்துக் கொண்ட மனோஜ்கிரன் மற்றும் மதன் ஆகியோர் கனலரசனை கட்டி பிடித்துக் கொண்டதில் இருவருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் குருவின் மகன் கனலரசன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயம் அடைந்த மனோஜ்கிரன், மதன் ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மனோஜ்கிரன் கொடுத்த புகாரின்பேரில் சின்னப்பிள்ளை(63), அவரது தம்பி காமராஜ்(58) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் எதிர் தரப்பினர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில் கனலரசன் நண்பர் அருண்குமார் (23) உள்பட இருவரை கைது செய்தனர். இதில் தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: