விசைப்படகுகள், வலைகள் சீரமைப்பு தீவிரம்: மீன்பிடி தொழிலுக்கு திரும்ப தயாராகும் புதுச்சேரி மீனவர்கள்

புதுச்சேரி: மீன்பிடி தடைக்காலம் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவடைவதால் புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு திரும்பும் வகையில் அவர்களின் படகுகள், வலைகளை தயார் படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா சமூக பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதைத் தொடர்ந்து புதுவையிலும் வழக்கமான மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15ம்தேதி முதல் தொடங்கியது. மத்திய அரசின் கணக்கீட்டின்படி ஜூன் 15ம்தேதி வரை (61 நாட்கள்) அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் 2 மாதத்திற்கும் மேலாக ஏற்கனவே தாங்கள் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் முடக்கியுள்ள நிலையில் மீன்பிடி தடை காலத்தை குறைக்க வேண்டுமென மீனவர் அமைப்புகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து இந்தாண்டு மே 31ம்தேதியுடன் (47 நாட்கள்) தடைக்காலம் முடிவடைவதாக மத்்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக விசைப்படகு உரிமையாளர்கள், மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் வலைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படகுகளை பழுதுபார்த்தல், வர்ணம் பூசுதல் மட்டுமின்றி சேதமடைந்த வலைகளை சரிசெய்யும் வேலைகளில் மீனவர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

மீனவர்கள் மீண்டும் தொழிலுக்கு திரும்பினாலும் ஊரடங்கு தொடரும் பட்சத்தில் வெளிமாநிலங்களுக்கு மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் மீன் மார்க்கெட்களுக்கு மீன்களின் வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: