வேதா இல்லம் மட்டுமல்லாது, அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள்; ஐகோர்ட் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று; ஜெ.தீபா பேட்டி

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நீதிமன்றம் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.  மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீடு உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசுகள் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறியதாவது; ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாகி உள்ளது. ஜெயலலிதாவின் சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது. அவசர சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால் மேல்முறையீடு செய்வோம். வேதா இல்லம் மட்டுமல்லாது, ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள். எனக்கும், எனது சகோதரருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக எங்களை உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்று எனவும் கூறியுள்ளார்.

Related Stories: