கொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள், உத்தரகாண்ட் காட்டுத்தீ : '2020ம் ஆண்டு மிகவும் மோசம்' : வைரலாகி வரும் #PrayForUttarakhand ஹாஷ்டாக்

டெல்லி: #PrayForUttarakhand என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது. கொரோனா ஒருபக்கம் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயால் பெரும் சேதத்தை வனங்கள் சந்தித்து வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் 46 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பற்றி எரிந்து கொண்டுள்ளது. குமான் பிராந்தியத்தில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இங்கு மட்டும் 12 இடங்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கிட்டத்தட்ட 51.43 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் இதுவரை தீயில் கருகிப் போய் விட்டன. கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட அரிய வகை விலங்குகளுக்கு தற்போது அழிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் அமேஸான் வனப்பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் பல அரிய வகை விலங்குகள் கருகிப் போயின. பெருமளவிலான காட்டுப் பகுதியும் கருகிப் போனது. அதே போலத்தான் ஆஸ்திரேலியாவிலும் மிகப் பெரிய காட்டுத் தீவிபத்தை உலகம் பார்த்தது. தற்போது அழகான உத்தரகாண்ட் மாநிலத்தின் வனப்பகுதி தொடர்ந்து எரிந்து கருகிக் கொண்டிருக்கிறது. தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் உத்தரகாண்ட் வன வளம் பெரும் சேதத்தை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் #PrayForUttarakhand என்ற ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. நெட்டிசன்கள் காட்டுத் தீ தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை #PrayForUttarakhand ஹாஷ்டாகில் பகிர்ந்து வருகின்றனர். 2020ம் ஆண்டு நாட்டுக்கு நேரம் சரியில்லையா அல்லது உலகத்திற்கே நேரம் சரியில்லையா என்ற எண்ணம் நீடித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ், நிலநடுக்கங்கள், அம்பன் சூறாவளி, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு, உத்தரகண்ட் காட்டுத் தீ போன்றவற்றால் மக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதால் 2020ம் ஆண்டு மிகவும் மோசமாக உள்ளது என்ற கருத்துக்கள் முகநூல், ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Related Stories: