அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா?..டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டு உள்ளதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் கொள்முதல் செய்யும் போது மதுபானங்கள் தரமானதாக இருக்கிறதா என்பதை அரசு சரிபார்க்கிறதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் விலைப் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்று டாஸ்மாக் நிறுவனம் ஜூன் 26-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் கூறியதாவது; டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.70-க்கு மேல் அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ரசீதுகள் கொடுப்பதில்லை. கடந்த 2003-ம் ஆண்டு டாஸ்மாக் விதிப்படி, அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்களை விற்க வேண்டும். அதிக விலைக்கு விற்கத் தடை விதிக்க வேண்டும், விலைப் பட்டியல் ஒட்ட உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, “மதுபானங்களைக் கொள்முதல் செய்யும்போது தரமானதாக இருக்கிறதா என்று அரசு சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா? இதற்கு ஆதாரம் உள்ளதா எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதுவரை எப்படி கொள்முதல் செய்தீர்கள் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த எம்.ஆர்.பி. விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா? மதுபானங்கள் விற்கும் போது, ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா? ஒவ்வொரு மதுபானக் கடையிலும் விலைப் பட்டியல் ஒட்டப்படுகிறதா? அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கண்டுபிடிக்கப்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இது தொடர்பாக ஜூன் 25-ம் தேதி அறிக்கை அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

Related Stories: