×

பெரியாறு அணைப்பகுதியில் மழைக்கு முன் முடியுமா மராமத்து?: தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்பு

கூடலூர்: கொரோனா ஊரடங்கால் பெரியாறு அணையில் மராமத்து பணி கிடப்பில் போடப்பட்டதாகவும், தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியாறு அணை மூலம் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் முதல்போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறந்து விடப்படும். அதற்கு முன், அணையில் நீர்மட்டம் குறைவாக இருக்கும் ஏப்ரல், மே மாதங்களில், தமிழக பொதுப்பணித்துறையினர் அணையில் மராமத்து பணிகளை மேற்கொள்வர். இதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
இதன்மூலம் பெரியாறு அணையில் 13 ஷட்டர்களை இயக்குதல், வண்ணம் பூசுதல், கேலரியை சுத்தம் செய்தல், ஷட்டர் முன் தண்ணீர் தேங்கும் பகுதியில் செடி, கொடி, மண் மேடுகளை அகற்றுதல், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் தேக்கடி சுரங்க வாய்க்காலில் உள்ள ஷட்டரில் மோட்டார் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். இதற்காக தமிழகத்திலிருந்து ஒப்பந்ததாரர் மற்றும் வெலையாட்கள் வருவர்.

கொரோனா ஊரடங்கால் இந்தாண்டு அணைப்பகுதியில் மராமத்து பணி நடக்கவில்லை என கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன், அணையில் மராமத்து பணிகளை மேற்கொள்ள தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியாறு அணை மீட்புக்குழு தலைவர் ரஞ்சித்குமார் கூறுகையில், ‘‘தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன், அணையில் மராமத்து பணிகளை செய்ய வேண்டும். தமிழகத்திற்கு தண்ணீர் வரும் யானை வாய்க்காலில் நீர்வரத்துக்கு இடையூறாக உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும். கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் இருந்து வேலையாட்கள் யாரும் அணைக்கு செல்லவில்லை.
இந்தாண்டு மராமத்து பணிகளை செய்யாவிட்டால், அடுத்தாண்டு இப்பணிகளை மேற்கொள்ளும்போது கேரளா இடையூறு ஏற்படுத்தும்’’ என்றார்.

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அணையை பராமரிக்க விடாமல் தடுத்தால், அது பெரிய பிரச்னையாகாதா? வழக்கமான பணிகளை தடுக்கக்கூடாது என கேரள வனத்துறைக்கு சுப்ரீம்கோர்ட் ஆர்டர் போடாதா? கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு பராமரிப்பு மேற்கொள்ளுங்கள் என கோர்ட் சொல்லும். கேரளாவில் தற்போது கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள்  வந்துள்ளது. நமது வேலையாட்களை அழைத்து வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்பே, பணிகளை செய்ய முடியும். இதனால், இரண்டு மாவட்ட கலெக்டர்கள் மூலம் பேசி, உள்ளூர் ஆட்களை வைத்து வேலை செய்கிறோம். வழக்கம்போல் மராமத்து பணி நடந்து கொண்டுதான் இருக்கிறது’’ என்றார்.

Tags : Rainfall ,Maramathu ,Periyar Dam , Can Maramathu,Rainfall ,Periyar Dam?
× RELATED முல்லைப் பெரியாறு கார் பார்க்கிங் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு