தேனி மாவட்டத்தில் பல நூறு ஏக்கரில் பயிரிட்ட தென்னை, வாழை, முருங்கையை ‘சுருட்டி தள்ளியது’ சூறைக்காற்று

ஆண்டிபட்டி / வருசநாடு / பெரியகுளம்: தேனி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை, வாழை, முருங்கை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள வாடிப்பட்டி, கன்னிமங்கலம், அணைக்கரைப்பட்டி, மூணாண்டிபட்டி, குன்னூர், அம்மச்சியாபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் அறுவடை செய்யும் நிலையில் தார்களுடன் இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. குறிப்பாக கன்னியமங்கலம் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கன்னியமங்கலம் விவசாயி பிலாவடியான் கூறுகையில், ‘‘3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்திருந்தேன். சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்துள்ளன. ஒரு வாரத்தில் வாழைத்தார்களை அறுவடை செய்ய இருந்த நிலையில், வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. இதனால் ரூ.7 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

தென்னையும் நாசம்: கடமலை - மயிலை ஒன்றியத்தில் வருசநாடு பசுமலைத்தேரி, சிங்கராஜபுரம், செல்வராஜபுரம், ஒத்தகுடிசை, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, தும்மக்குண்டு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, தென்னை, இலவம், கொட்டை முந்திரி சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளியுடன் பெய்த மழைக்கு பல தோட்டங்களில் தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தன:  கடமலை - மயிலை ஒன்றியத்தில் சூறாவளிக்கு பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விவசாயிகள் அவதிப்பட்டனர். சேதப்பகுதிகளை மின்வாரிய அதிகாரிகள், தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விவசாயி ஜெயராஜ் கூறுகையில், ‘‘சூறாவளிக்காற்றுடன் மழை பெய்யும்போது வாழை, தென்னை மரங்கள் சாய்கின்றன. இதனால் இழப்பு ஏற்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.

முருங்கை சேதம்: பெரியகுளம் அருகே முருகமலை, ரெங்கநாதபுரம், குள்ளப்புரம் ஆகிய  பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான 50 ஏக்கருக்கும் மேற்பட்ட தோட்டங்களில் இருந்த வாழை, தென்னை  மற்றும் முருங்கை மரங்கள் சாய்ந்தன. பலனளிக்கும் வேளையில் தென்னை, வாழை, முருங்கை சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, அ.ரெங்கநாதபுரம், அ.வேலாயுதபுரம், 5 ஏக்கர் காலனி, மருகால்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நாடு, ரஸ்தாலி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைகளை சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 300 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன. இதேபோல, 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தேனி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது இயற்கை சீற்றத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: