×

‘பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம்’ நரிக்குறவர்களை கையேந்த விட்ட கொரோனா: கருணை காட்டுமா அரசு

பேட்டை:  உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா இந்தியாவையும் மிரட்டி வருகிறது. பசிப்பிணி போக்கி நரிக்குறவர்கள் வாழ்வாதாரம் காத்திட  கருணை காட்டுமா அரசு என்ற எதிர்பார்ப்புடன  எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ‘‘பாசி மணி ஊசியெல்லாம் விற்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விற்க மாட்டோம்’’ என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் தங்களுக்கென தனியொரு முத்திரையுடன் வாழும் நரிக்குறவர் சமூகத்தினர் நெல்லையில் பேட்டை, வள்ளியூர், அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். மராட்டிய மாநிலத்தினை பூர்வீகமாக கொண்ட இவர்கள் சத்ரபதி சிவாஜியின் படையில் தற்கொலை படைவீரர்களாக விளங்கினர். பின்னர் முகலாயர்  ஆட்சியில் சிதறுண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்தனர். நரி, குருவி, முயல் என பல்வேறு பிராணிகளை வேட்டையாடும் தொழிலுடன் தேன் விற்பனை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தனர். இவர்களை சென்னையில் குருவிக்காரன் எனவும், ஆந்திராவில் வாக்ரீவாலா என்றும், நக்காலே என்றும் நெல்லையில் நரிக்குறவர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.நெல்லையில் இவர்கள் வேட்டையாடுவதுடன், ஊசி மணி பாசி வியாபாரம் செய்து ஜீவிதம் செய்கின்றனர். தங்களின் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை மதுரையில் மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை கூலி அடிப்படையில் மாலைகளாக உருவாக்கி மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தயாரிக்கும் பொருட்களில் பாசி மாலை, துளசி மாலை, நவரத்தின மாலை, கருந்துளசி மாலை, கவுட்டாபுல், கருவாலி தட்டு போன்றவை சிறப்புமிக்கது.

தயாரிப்பு பொருட்களுடன் ஊசி, ஊக்கு, சீப்பு, கொண்டை பின், பொட்டு, பிற மங்கல பொருட்களையும் மொத்தமாக வாங்கி பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகத்தினை சேர்ந்த இவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் பேரில் சிலர் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். இன்னமும் பலர் போதிய விழிப்புணர்வின்றி  பின்தங்கியே காணப்படுகின்றனர்.இந்நிலையில்  உலகையே புரட்டி போட்ட கொரோனாவில்  இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில்  தொழில்கள் முடக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதில் நரிக்குறவர் சமூகத்தினரும் தப்பவில்லை. 4ம் கட்ட தளர்வால் ஒரளவுக்கு தொழில் செய்து பசி பிணியை போக்கி விடலாம் என்று எண்ணிய இவர்களின் எண்ணங்கள் பலிக்காதது வேதனைக்குரியது. பேருந்துகள் இயக்கப்படாததது இவர்களுக்கு பலத்த அடியாகவே அமைந்தது. தெருக்களில் நடந்து சென்று வீடு வீடாக பொருட்களை விற்று காசு பாத்து குழந்தைகளுக்கு பால், பவுடர் வாங்கலாம் என்று சென்றாலும் கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் அவர்களை விரட்டி அடிக்கின்றனர்.

இதனால் பிழைப்புக்காக வாழும் குடியிருப்பை ஒட்டிய சாலையோரம் வாகனங்களில் செல்வோரிடம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் யாசகம் பெற்று வருகின்றனர். சிலர் சாலையோரம் தயாரிப்பு பொருட்களை விரித்து வைத்து யாராவது பொருட்கள் வாங்க வரமாட்டார்களா என்ற கவலையோடு காத்திருக்கின்றனர். இவர்களின் துயர் துடைத்திட மாவட்ட நிர்வாகம் காய்கறி கடைகள் மட்டன் ஸ்டால் போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கீடு செய்து கொடுத்தது போல் நரிக்குறவர் சமூகத்தினர் பயன் பெறும் வகையில் குறிப்பிட்ட இடம் ஒதுக்கீடு செய்து கொடுப்பதுடன், வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டுமென்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து நரிக்குறவர்கள் கூறுகையில், நாங்க பிழைப்புக்காக இங்க வந்தவங்க. யாரும் என்னைக்கும் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட்டதில்லை. எங்க உழைப்பை நம்பியே வாழ்கிறோம். பாசிகள், விரத மாலைகள் தயாரித்து அதை விற்கு கிடைக்கும் பணமே எங்களுக்கு பிரதான வருமானம். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால் சபரிமலை சீசன் எங்களை கைவிட்டு விட்டது. குலசை தசரா சீசனும் நடைபெறுமா என தெரியவில்லை. பொது இடங்களில் நாங்க பொருட்களை விற்கச் சென்றால், கொரோனா காலம், குளிக்காதவர்கள் வருகிறார்கள் என்று நக்கல் செய்து மக்கள் எங்களிடம் பொருட்கள் வாங்க மறுக்கிறார்கள்.

சிறுவயது முதலே பலவித உணவு பொருட்களை உண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் உடலில் இயல்பாகவே எதிர்ப்பு சக்தி உண்டு. நாங்கள் யாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில்லை. தயாரித்த பொருட்களை விற்க முடியாததால் வருமானமின்றி தவிக்கிறோம். பழைய சினிமா பாட்டில் வருவது போல் பாசி மணி ஊசி எல்லாம் விற்போமுங்க. ஆனா காசுக்காக மானத்தை விற்க மாட்டோமுங்க என்பதற்கேற்ப ஒரு வேளை சோற்றுக்காக பெற்ற குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களை கரை சேர்க்க அரசுதான் உதவனும் என்றனர்.

உணவுக்காக உயிரை பணயம் வைக்கும் அவலம்
கொரோனா பாதிப்பால் வேலை வாய்ப்பை இழந்த நரிக்குறவர்கள் அரசு, தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரண பொருட்களை கொண்டு ஓரளவுக்கு சமாளித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக எந்த ஒரு நிவாரணமும் கிடைக்க பெறாமலும் வேலை வாய்ப்பின்றியும் கடும் அவதியுற்று வந்தனர். தற்சமயம் பசிப்பிணி போக்கிட வேறு வழியின்றி சிறியோர் முதல் பெரியோர் வரை அவ்வழியாக சாலையில்  வாகனங்களில் செல்வோரிடம் குறுக்கிலும் நெடுக்கிலுமாக ஓடி உயிரை பணயம் வைத்து யாசகம் பெற்று பசிப்பிணியாற்றி வருகின்றனர். அவ்வாறு செல்லும்போது விபத்தில் சிக்கி உயிர்பலி ஏற்படும் அவலம் உள்ளது.

காலம் செய்த கோலமா?
ஒளிவிளக்கு படத்தில் வரும் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க பாடலில் படி அரிசி கிடைக்கிற காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே,  குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே நாங்க சட்டதிட்டம் மீறி இங்கு நடப்பதில்லே எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே நா ங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே என்ற வரிகள் வரும். ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படும் நிலையிலும் இவர்கள் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டது அரசின் அலட்சியத்தாலா அல்லது காலம் செய்த கோலமா என்று தெரியவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Time ,bell ,injections
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை