×

வராக்கடன் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ₹20 லட்சம் கோடி சிறப்பு திட்டத்தால் பொதுத்துறை வங்கிகள் நஷ்டமடையும்: பொருளாதார நிபுணர்கள், வங்கி நிர்வாகிகள் அதிருப்தி

சேலம்: மத்திய அரசு அறிவித்துள்ள ₹20 லட்சம் கோடி சிறப்பு திட்ட தொகுப்பால், பொதுத்துறை வங்கிகள் நஷ்டமாகி வராக்கடன் அளவு பன்மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை ஏற்படும் என பொருளாதார நிபுணர்களும், வங்கி தொழிற்சங்க நிர்வாகிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு, ₹20 லட்சம் கோடி சிறப்பு திட்ட தொகுப்பை அறிவித்துள்ளது. பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் வங்கிகளில் எளிதில் கடன் பெற்று, தங்கள் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய இத்தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசின் சிறப்பு திட்டத்தால் தொழில் நிறுவனங்களும், மக்களும் நேரடியாக எந்த சலுகையும் பெற முடியாது. மாறாக வங்கிகளில் கடன்களை அதிகளவு பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த ₹20 லட்சம் கோடி சிறப்பு திட்ட தொகுப்பில், தொழில்துறையினர், வியாபாரிகள், மக்களுக்கு நேரடியாக ₹1.86 லட்சம் கோடி மட்டுமே வழங்கப்படுகிறது. மீதியுள்ள ₹19 லட்சம் கோடி திட்டமும் வங்கிகள் வழங்கும் கடனாக இருக்கிறது. முடங்கி கிடக்கும் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்றால்,முதலில் மக்களிடம் நுகர்வு திறனை, அதாவது பொருட்களுக்கான தேவையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் கையில் பண புழக்கம் மீண்டும் ஏற்பட வேண்டும். இது நடந்தால் தான்,எந்தவொரு பொருளையும் உற்பத்தி செய்து, சந்தையிடல் மேற்கொள்ள இயலும். பொருளாதாரம் மேம்பட்டு சுழற்சி நிலையை அடையும். ஆனால், இத்தகைய நுகர்வுதிறனை மக்களிடம் ஏற்படுத்தாமல், தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து கூடுதல் பொருட்களை உற்பத்தி செய்தால்,எப்படி பொருளாதாரம் சீரடையும் என்பதே அடிப்படை கேள்வியாக எழும்பி நிற்கிறது என பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 உற்பத்தி, வேலைவாய்ப்பு, தேவை என்ற மூன்றை சார்ந்து தான், பொருளாதாரம் நகர்கிறது. அப்படி இருக்கையில், தற்போது வேலையின்றியும், கையில் பணம் இன்றியும் முடங்கி கிடக்கும் மக்களிடம் முதலில் நுகர்வுத்திறனுக்காக பணத்தை கொடுக்க வேண்டுமே தவிர, தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்திக்காக கடன் கொடுப்பது சாத்தியப்படாது எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நாட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி என 27 பொதுத்துறை வங்கிகளும், 20க்கும் அதிகமான தனியார் வங்கிகளும் உள்ளன. இதன் கிளைகள் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கிறது. இந்த வங்கிகள் மூலம் தற்போதும் தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில், கடனை திருப்பி செலுத்தும் திறன் இருக்கிறதா? என ஆய்வு செய்தும், பிணையை தனது கைக்குள் வைத்துக் கொண்டும் கடன்களை வழங்கி வருகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்ட தொகுப்பில், எவ்வித நிபந்தனையும் இன்றி கடன்களை கொடுக்கும்படி வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் தொழில்துறையினர் அதிகளவு கடனை பெற்று, மீண்டும் தொழிற்சாலைகளில் உற்பத்தியை மேற்கொள்ளவுள்ளனர்.

1.35 லட்சம் கோடி டெபாசிட் தொகையை கொண்டுள்ள வங்கிகள், தற்போது அதிகப்படியான கடனை கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. படிப்படியாக தொழில் நிறுவனங்களுக்கும், வியாபாரிகளுக்கும் கடனை வாரி வழங்கவுள்ளனர். இன்றைய சூழலில் வங்கிகளில் வராக்கடன் என்பது ₹6 லட்சம் கோடியாக இருக்கிறது. இது வரும் ஆண்டில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு திட்ட தொகுப்பின்படி அதிகளவு கடனை வங்கிகள் கொடுத்து, நஷ்டமாகி வராக்கடனை சுமந்து நிற்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும் என வங்கி தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி சேலம் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:மத்திய அரசு அறிவித்துள்ள ₹20 லட்சம் கோடி திறப்பு திட்டம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதை உறுதியாக கூற இயலாது. காரணம்,மக்களிடம் பொருட்களுக்கான தேவையை ஏற்படுத்தாமல் உற்பத்திக்கு வித்திடும் வகையில் கடனை வாரி வழங்கச் சொல்லியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து இன்னும் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வர முடியாமல் இருப்பது போல், தற்போது அறிவித்த சிறப்பு திட்ட தொகுப்பின் மூலம் வங்கிகள் நஷ்டமடைந்து சிரமத்தை சந்திக்கும் நிலை உருவாகும்.

பொதுத்துறை வங்கிகளில் ₹15 லட்சம் கோடி வராக்கடன் இருக்கிறது. தனது லாபத்தை வராக்கடனில் வரவு வைத்ததன் மூலம் ₹6 லட்சம் கோடியை வராக்கடனாக காட்டுகின்றனர். இதுவே அடுத்த ஆண்டில் வராக்கடன் பன்மடங்கு உயர்ந்து,வங்கிகளுக்கு லாபமே இல்லை என்ற சூழலை ஏற்படுத்தும். பிறகு பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதால், தனியார் மயமாக்குவோம் என கூறுவார்கள். இந்த இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்.
சட்டப்படி கடன் வாங்கியவர்,தொடர்ந்து 3 மாதம் அசலையும், வட்டியையும் செலுத்த வில்லை என்றால்,வராக்கடனாளியாகிறார். அத்தகைய கடனாளிகள் இனிமேல் அதிகரிப்பார்கள். இந்த சிறப்பு திட்ட தொகுப்பில் வங்கிகள் அதிகளவு கடன் கொடுக்க வேண்டும் என கூறப்படுவதால்,முன்கூட்டியே வங்கி அதிகாரிகள்,நிபுணர்களை அழைத்து பேசி முடிவெடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்க கூடும். ஆகவே பொருளாதார மேம்பாடு,இந்த ₹21 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பால் மாறப்போகிறதா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு சுவாமிநாதன் கூறினார்.


Tags : banks ,bank executives ,Economists , Public sector, 20 trillion special project, Economists, bank executives ,dissatisfied
× RELATED கசிவுநீர் குட்டையில் இருந்து நீர்...