வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனாவால் வாலாஜாவில் தேங்கிக் கிடக்கும் பட்டுச்சேலைகள்: கண்ணீர் கடலில் மிதக்கும் பட்டு நெசவாளர்கள்

வாலாஜா: உலகிற்கு பட்டை அறிமுகம் செய்தது சீனம்தான் என்றாலும், பட்டு நுகர்விலும், உற்பத்தியிலும் இந்தியா அன்று தொடங்கி இன்று வரை முன்னிலை வகிக்கிறது. பல்லவர்களின் ஆட்சியின்போது காஞ்சிபுரம் வந்த சீன யாத்ரீகர் யுவான்சுவாங் இங்கு பட்டு நெசவும், கலைநயம்மிக்க பட்டுசேலைகள் உற்பத்தி தொடர்பாகவும் தனது பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.பட்டு நெசவை பொறுத்தவரை காஞ்சிபுரம், ஆரணி, வாலாஜா, மதுரை என்று நடந்து வருகிறது. மிக அதிகமாக காஞ்சிபுரம், ஆரணியில் பட்டு நெசவுத்தொழில் அதிகம். அதற்கடுத்த இடத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா உள்ளது. காஞ்சிபுரத்துக்கு ஈடாக வாலாஜாவிலும் அதே தரத்தில் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தின் சவுராஷ்டிராவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பட்டுநூல்காரர் என்று அழைக்கப்படும் சவுராஷ்டிர சமூகத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இவர்களுடன் அனைத்து சமூகத்தவரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஆயிரம் பேர் நேரடியாகவும், 2 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இங்கு உற்பத்தியாகும் பட்டுச்சேலைகள் காஞ்சிபுரம், சென்னை, பெங்களூரு, கேரளா உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. பட்டு சேலை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 200க்கும் மேற்பட்டவர்கள்  ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் மாதம் ஒன்றுக்கு ₹3 கோடி வரை வர்த்தகம் செய்து வருகின்றனர் ‌ ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக பட்டு சேலை வர்த்தகம் மந்தநிலையை அடைந்துள்ளது. நவீன உடைகள் மோகம்,   போலி பட்டு சரிகையால் உற்பத்தி செய்யபடும் பட்டு சேலைகள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.  அதனால் அசல் சரிகை கொண்ட பட்டு ேசலைகளை சந்தைப்படுத்த முடியவில்லை என பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் உலகையே புரட்டி போட்டுள்ள கொரோனா பிற தொழில்களை போன்றே பட்டு சேலை உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தொழிலை நம்பியிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் வேலைவாய்ப்பு மட்டும் பாதிக்கப்பட்டதுடன், விற்பனைக்காக தயார் நிலையில் இருந்த ₹2 கோடி மதிப்பிலான பட்டு சேலைகள் அப்படியே தேங்கி கிடக்கின்றன.  இது ஒருபுறம் என்றால் மறுபுறம்  ஊரடங்கு காரணமாக பட்டு சேலைக்கான மூலப்பொருட்கள் கிடைக்காமல் உற்பத்தியாளர்கள் தவித்து வருவதாக பட்டுசேலை உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மூலப்பொருட்களான சரிகை,  கோராபட்டு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.  கடந்த இரண்டு மாதங்களாக அன்றாட பிழைப்புக்கே வழியின்றி பசியுடன் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கட்டுப்படியாகாத கூலி நிர்ணயம். அதேநேரத்தில் எங்களால் வேறு தொழிலுக்கும் செல்ல முடியவில்லை.  எனவே தள்ளாட்டத்தில் இருக்கும் பட்டு சேலை உற்பத்தி தொழிலை தூக்கி நிறுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே பட்டு சேலை உற்பத்தியாளர்களின் எதிர்பார்ப்பு.

குறைந்த வட்டியில் வங்கிக்கடன்

வாலாஜா பட்டு சேலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘பட்டு சேலை உற்பத்தியில் பல்வேறு தடைக்கற்கள் இருந்தாலும்   தொழிலாளர்கள் நலன் கருதி தொடந்து தொழில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உற்பத்தி செய்து தேங்கிய சேலைகளை  என்ன செய்வது என்பது தெரியவில்லை.   கைவினை தொழிலாக இதனை கருதி மிகக்குறைந்த வட்டியில் நீண்டகால கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும். பட்டு நெசவுத்தொழிலாளர் குழந்தைகளின் கல்விக்கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும். மேலும் இத்தொழிலில் உள்ள சிரமங்களை ஆய்வு செய்து அதற்கான தீர்வையும் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: