போருக்கு தயார் ஆகுங்கள்.. சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜின்பிங் கட்டளை : போர் விமானங்கள் நிறுத்தப்பட்டதால் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு

பெய்ஜிங் : சீனா மற்றும் இந்திய படைக் குவிப்பால் லடாக் எல்லையில், பரபரப்பு நீடித்து வரும் நிலையில், போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் படி சீன படைகளுக்கு அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டு இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய ராணுவத்திற்கும் சீன படையினருக்கும் பிரச்னை வெடித்தது. இதனைத் தொடர்ந்து பங்கோங் ஏரியில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தினை சீனா மீண்டும் கட்டமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

செயற்கைகோள் படங்கள் மூலம் இது உறுதியாகி உள்ளது. இது தவிர கால்வான் நதிப் படுக்கைக்கு வடக்கே சீன துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவும் லடாக் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்து இருந்தது. இந்த நடவடிக்கைகளால் இந்தியா, சீனா நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தான் போர் சூழல்களை எதிர்கொள்ள தயாராக நிலையில் இருக்குமாறு சீன ராணுவத்திற்கு அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டு இருக்கிறார். மேலும் நாட்டின் இறையாண்மையை உறுதியாக பாதுகாக்குமாறு ராணுவத்திடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஜின்பிங் எந்த ஒரு அச்சுறுத்தலையும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அவரது கருத்துக்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Related Stories: