×

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.15, 128 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது...!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி,  ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கொரோனா தாக்கம் காரணமாக சில நாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு  இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளது. இச்சூழலில், இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் முதலீடுகளை  ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு ஒன்றினை அமைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரூ.15, 128 கோடி முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் ரூ.15,128 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ,15.128 கோடி முதலீடு செய்வதால் சுமார் 47,150 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags : countries ,CM Palanisamy ,MOUs ,China , Investments of Rs 15, 128 crore gravity; Signing of 17 MOUs in the presence of CM Palanisamy: Opportunities to create 47,150 jobs
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...