×

கொரோனாவை விட வீரியம் மிகுந்த வைரஸ்கள் வரக்கூடும்: பிரபல வைரஸ் பெண் ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை

பீஜிங்: கொரோனா வைரசை விட வீரியம் மிகுந்த வைரஸ்கள் தாக்கும் அபாயம் இருப்பதாக சீனாவை சேர்ந்த பிரபல வைரஸ் பெண் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார். சீனாவின் வுகான் வைரலாஜி ஆய்வகத்தின் துணை இயக்குனர் மற்றும் வவ்வால் பெண்மணி என அறியப்படும் பிரபல வைரஸ் பெண் ஆராய்ச்சியாளர் ஷீ ஜெங்லி கூறியதாவது: தற்போது அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் என்பது பனிப்பாறையின் முனை போன்றது. இதனை காட்டிலும் வீரியம் மிகுந்த பல வைரஸ்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது. கொரோனா நோய் தொற்றை போல் மற்றொரு வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று விரும்பினால், இயற்கையில் காட்டு விலங்குகள் மூலமாக பரவும் இந்த வைரஸ்கள் குறித்து முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்து எச்சரிக்கைகளை வழங்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் கொரோனாவை காட்டிலும் மிக கொடிய ஒன்று எதிர்காலத்தில் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. நான் ஆய்வு செய்த வைரஸ்களின் மரபணு பண்புகள், மனிதர்களில் பரவி வரும் கொரோனா வைரசுடன் பொருந்தவில்லை. அதே நேரத்தில் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகள் குறித்து ஆராய்ச்சியாளர்களும், அரசுகளும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். உலக நாடுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அறிவியல் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்.

சத்தியமா சொல்றேன்….
வைரஸ் பெண் ஆராய்ச்சியாளர் ஷீ ஜெங்லி தனது சமூக வலைதளத்தில், ‘கொரோனா நோய் தொற்றுக்கும் வுகான் ஆய்வகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என நான் சத்தியமிட்டு சொல்வேன். ஆய்வகத்தில் இருந்து வைரஸ் பரவியதாக கூறுவது முற்றிலும் கட்டுக்கதையாகும்,’ என்று பதிவிட்டுள்ளார்.


Tags : researcher , Corona, viruses, famous viral female researcher
× RELATED இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தில்...