×

ஆந்திராவில் 12 மாவட்டங்களில் திருப்பதி லட்டு விற்பனை தொடங்கிய 3 மணி நேரத்தில் 2.40 லட்சம் லட்டுகள் விற்று தீர்ந்தது: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: ஆந்திராவில் உள்ள 12 மாவட்டங்களில் விற்பனை தொடங்கிய 3 மணி நேரத்தில் 2.40 லட்சம் லட்டுகள் விற்று தீர்ந்ததாக திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை குறைந்த விலையில்  பக்தர்களுக்கு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் குண்டூர் மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் அங்கு மட்டும் லட்டு விற்பனை செய்யப்படாமல் மற்ற 12 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான திருமண மண்டபங்களில் நேற்றுமுன்தினம் விற்பனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கியது. 3 மணி நேரத்தில் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.  

இந்த மாதம் 30ம் தேதி முதல் குண்டூரில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநில பக்தர்கள் கோரிக்கை வைத்தால் தினமும் தமிழகத்திற்கு ஒரு லட்சம் லட்டுகள், தெலங்கானாவிற்கு 50 ஆயிரம் லட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது: ஒரு லட்டு தயார் செய்வதற்கு 40ஐ தேவஸ்தானம் செலவு செய்கிறது. தற்போது பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய லட்டு வழங்கவில்லை. எனவே, பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்போது அனைத்து மாவட்டங்களிலும் லட்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான போக்குவரத்து செலவு மற்றும் தொழிலாளர்கள் கூலி உள்ளிட்டவை அனைத்தும் சேர்த்து ஒரு லட்டுக்கு 55 முதல் 60 வரை தேவஸ்தானத்திற்கு செலவாகிறது.
இருப்பினும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி லட்டு விற்பனையில் லாபம், நஷ்டம் பார்க்காமல் சுவாமி தரிசனம் செய்ய முடியாதவர்கள் லட்டு பிரசாதத்தின் மூலம் சுவாமியின் தரிசனம் செய்த திருப்தியை வழங்க வேண்டும் எனக் கூறினார். அதன்பேரில் கொரோனா பரவல் முடிந்து மீண்டும் பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் அனுமதிக்கப்படும் வரை இந்த லட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : districts ,Andhra Pradesh ,Tirupati ,Devasthan , Andhra, 12 Districts, Tirupati Latu, Devasthana Officer
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி