தமிழகத்தில் 5 மாதத்துக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு? அரசு தீவிர பரிசீலனை

சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி மேனிலை வகுப்புகள் ஆகஸ்ட் மாதமும், கீழ்நிலை வகுப்புகள் செப்டம்பர் மாதமும்  தொடங்கும் என்று தெரிகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு இருந்ததால், மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு தற்போது 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தபடியாக பொதுத் தேர்வுகள் நடத்துவது, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அது குறித்து ஆய்வு செய்யவும், பணிகளை முறையாக செய்வது குறித்தும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசுத் தேர்வுகள் இயக்குநர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பங்கேற்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணிக்காக 200 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் அந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடக்க உள்ள பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நீட் தேர்வுகளில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சி மற்றும் நீட் தேர்வை தமிழகத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவின் பணிகள் குறித்தும் அமைச்சர் கேட்டார். மேற்கண்ட பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறித்தும் அமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மதியம் 12.45 மணிக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருவது குறித்தும், அதன் காரணமாக ஏற்படும் பலிகள் குறித்தும் முதல்வர் பேசியுள்ளார். அதனால், கொரோனா பாதிப்பு இருக்கும் போது பள்ளிகளை திறப்பது மாணவர்கள் பாதுகாப்புக்கு ஏற்றதாக இருக்காது என்றும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகளை திறக்கலாம் என்ற முதல்வரிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, உயர் வகுப்புகள் ஆகஸ்ட் மாதமும், கீழ் வகுப்புகள் செப்டம்பர் மாதமும் தொடங்கலாம், அப்போது சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உயர் வகுப்புகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு காலை ஷிப்டில் வகுப்புகளும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மதிய ஷிப்டில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் எல்கேஜி முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளவும் கூறப்படுகிறது.  அதைத் தொடர்ந்து, விரைவில் இது குறித்த அறிவிப்புகளை வெளியிடலாம் என்று அப்போது முதல்வரும், அமைச்சரும் முடிவெடுத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

* தயாராகி விட்டது மத்திய அரசு

* புதுடெல்லி: பள்ளிகள் திறப்பது குறித்த மத்திய மனிதவள அமைச்சகத்திற்கு என்சிஇஆர்டி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. அதில், மண்டல வாரியாக பள்ளிகளை திறக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்சிஇஆர்டியின் பரிந்துரைகள்:

* முதற்கட்டமாக வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் பள்ளிகளை திறக்கலாம்.

* 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம்.

* வகுப்பறையில் அதிகபட்சம் 15-20 மாணவர்களே இருக்க வேண்டும். 30% மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

* வகுப்பறையில் மாணவர்கள் அமர்வதில், 6 அடி தனிநபர் இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

* காலையில் பொது பிரார்த்தனை நடத்தக் கூடாது.

* அனைத்து மாணவர்கள் மாஸ்க் அணிந்தே இருக்க வேண்டும்.

* பெற்றோர்கள் யாரும் பள்ளி வளாகத்திற்கு வரக்கூடாது. இவ்வாறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பள்ளிகள் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு அல்லது ஆகஸ்ட், செப்டம்பரில் திறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: