×

மே 31ம் தேதி ஊரடங்கிற்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கினால் ஆபத்து: தமிழக அரசுக்கு மருத்துவக் குழு எச்சரிக்கை

சென்னை: ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பொதுப் போக்குவரத்தான பஸ்களை இயக்கினால் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கும் என்று முதல்வருடனான ஆலோசனையின் போது மருத்துவக் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மே 31ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்கள் (ஜூன் 14ம் தேதி) வரை நீட்டிக்கலாமா அல்லது ஊர டங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ளலாமா? பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா என்பது உள்ளிட்டவைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆலோசனை நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் பிரப்தீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் வழிமுறைகள், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்கனவே உள்ள நோய்களை கண்டறிந்து இறப்பை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், முக்கியமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் வராமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய டாக்டர்கள் பலர், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்” என்றே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் வரும் நாட்களில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் 5ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியிடப்படும். குறிப்பாக, இந்த 5ம் கட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் நோய் அதிகம் பாதித்து வரும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்படும் என்று கூறப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்துகளான பஸ், ரயில் பயணங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது.


Tags : curfew , Curfew, Bus Transport, Tamil Nadu Government, Medical Group
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்