கொரோனா பாதுகாப்பு கவச ஆடை தைக்க உள்நாட்டிலேயே தயாரித்த இயந்திரம் அறிமுகம்

திருப்பூர்: கொரோனா பாதுகாப்பு கவச உடையில், தையல் ஊசி துவாரம் வழியாக கிருமி கலந்த காற்று உள்ளே செல்லாத வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டேப் சீலிங் இயந்திரத்தை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் அறிமுகம் செய்து வைத்தார். இதுகுறித்து திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் சக்திவேல் கூறியதாவது: திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பலர், கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் கவச ஆடைகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். பாதுகாப்பு கவச உடையில் தையல் ஊசி துவாரம் வழியாக கிருமி கலந்த காற்று உள்ளே செல்லாதவாறு ஆடை தைக்க டேப் சீலிங் இயந்திரம் பயன்படுகிறது.

இதை சீனா, கொரியா ஆகிய நாடுகளிலிருந்து ரூ.5 லட்சம் செலவிட்டு இரண்டு, மூன்று மாதம் காத்திருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. தற்போது இந்தியாவிலேயே டேப் சீலிங் இயந்திரத்தை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. இந்நிலையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் உள்ளதால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் டீ-சர்ட் கலரிலேயே மாஸ்க் தயாரித்து செட்டாக விற்க ஆரம்பித்துள்ளனர். பாதுகாப்பு கவச உடை, முக கவசம் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருவதால் இத்தயாரிப்புகளில் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இதன் மூலம் இந்திய பின்னலாடை நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வரை வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Related Stories: