ஊரடங்கில் உணவு பொட்டலம் வழங்கிய போது பிச்சை எடுத்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த டிரைவர்: சமூக இடைவெளியுடன் திருமணம் நடந்தது

கான்பூர்: ஊரடங்கில் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கிய போது, பிச்சை எடுத்த பெண்ணை டிரைவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் அனில். இவர் அப்பகுதியில் உள்ள சமூக சேவகரும் தொழிலதிபருமான லால்டா பிரசாத் என்பவருக்கு கார் ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சாலைகளில் உள்ள ஆதரவற்றோருக்கு தினமும் ஒரு வேளை உணவை லால்டா பிரசாத் வழங்கி வந்துள்ளார். அப்போது கார் டிரைவர் அனில், ஆங்காங்கே இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட பாலத்துக்கு அருகே தினமும் ஒரு கூட்டத்துக்கு உணவுகளை வழங்கி வந்த நிலையில், அங்கு பிச்சை எடுத்து வந்த பெண் ஒருவரும் தினமும் அனில் வழங்கி வந்த உணவுக்கு காத்திருப்பது வழக்கமாகியுள்ளது. அப்போது அப்பெண்ணுக்கும் அனிலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் லால்டா பிரசாத்க்கு தெரியவந்தது. பின்னர், அந்த பெண்ணுக்கு தினமும் இரண்டு முறை உணவு வழங்க அவர் கூறியுள்ளார். அதன்படி தினமும் 2 வேளை உணவு வழங்கப்பட்டது. பின்னர், அந்த பெண் குறித்து அனில் விசாரித்த போது, அந்த பெண்ணின் பெயர் நீலம். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

அவரது தாய்க்கு பக்க வாதம் ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். இந்நிலையில் நீலத்தின் சகோதரனும், அவரது மனைவியும் நீலத்தை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதனால் எங்கு போவதென தெரியாமல், கடந்த சில மாதங்களாக அந்த பாலத்துக்கு அடியில் நீலம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இதையெல்லாம் அறிந்த அனில், நீலத்தை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அந்த விருப்பத்தை தனது முதலாளியிடமும், அந்த பெண்ணிடமும் தெரிவித்தார். பின்னர் இவர்களது திருமணம் அப்பகுதியில் உள்ள புத்தர் ஆசிரமத்தில் சமூக இடைவெளியோடு நடந்தது.

அதில், ஏராளமான சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். கையில் உள்ள சில்லறையை கொடுத்துவிட்டு செல்லாமல், தனது வாழ்க்கையையே கொடுத்துள்ள அனிலின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: