×

அரசு விழாக்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அமைச்சர் அலட்சியம்: சிவகங்கை மாவட்ட மக்கள் புகார்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டங்களில் நடக்கும் அரசு விழாக்களில் அமைச்சர் பாஸ்கரன், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அன்னவாசலில் நேற்று குடிமராமத்து திட்டப்பணி துவக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. எம்எல்ஏ நாகராஜன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன், ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் அன்னவாசல் பெரியகண்மாய் குடிமராமத்து பணியினை துவக்கி வைத்தார். அரசு விழா என்றாலும் நிகழ்ச்சியில் அதிமுகவினர் அதிகளவில் வந்ததுடன் அமைச்சருடன் நெருக்கியடித்து நின்றனர்.

அமைச்சர் பாஸ்கரன் திருப்புவனம், இளையான்குடி என இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே அவர் பங்கேற்ற பல நிகழ்ச்சிகளில் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியின்றி பங்கேற்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது. கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க கலெக்டர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், போலீசார், வருவாய்த்துறை என அனைத்து தரப்பினரும் அரசு விழாக்களுக்கு முகக்கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால் அமைச்சர் மட்டும் முகக்கவசம் அணியாமல் வருவதோடு, சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக உள்ளார்.

அவருடன் வரும் கட்சி நிர்வாகிகளும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நெருக்கமாக நிற்கின்றனர் என சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags : Minister ,Sivaganga district , Government ceremony, social gap, minister negligence
× RELATED சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று...