ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் அகற்றப்படாத தடுப்புகளால் புதுவை, கடலூர் மக்கள் பாதிப்பு

கடலூர்: கடலூர் - புதுச்சேரி இடையே வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமைக்கப்பட்ட தடைகள் நாட்கள் பல கடந்தும் அகற்றப்படாததால் இரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதுவை மாநில அரசு தமிழக பகுதியான கடலூர் ஒன்றிய எல்லைப்பகுதியில் அழகியநத்தம், சோரியாங்குப்பம் ,வெளிச்செம்மண்டலம், தூக்கணாம்பாக்கம், ரெட்டிச்சாவடி என பல்வேறு இடங்களில் சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து புதுச்சேரி மாநிலத்துக்கு தமிழக மக்கள் வராமல் இருப்பதற்கு வழி காணப்பட்டது.

இதற்கிடையே 50 நாட்கள் ஊரடங்கு கடந்த நிலையிலும் தளர்வுகள் பல அறிவிக்கப்பட்ட போதிலும் தடுப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் கடலூர் நகரில் இருந்து புதுச்சேரி கிராம பகுதிகளுக்கு செல்லும் மக்களும், இதுபோன்று கடலூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு வரக்கூடிய கிராம மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இயற்கையாகவே இரு மாநில எல்லை கோட்பாடுகளின்படி தமிழக புதுச்சேரி பகுதிகள் ஆங்காங்கே விட்டுவிட்டு அமைந்துள்ளது. இதனால் தடுப்பு வேலிகள் அமைப்பு காரணமாக முறையாக அவரவர் பகுதிக்குச் செல்வதில் சிரமங்கள் பல ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இரு மாநில அரசு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி கிராம மக்களுக்கு முறையான வழிப்பாதையை தடையின்றி அமைவதற்கு வழி காண வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Related Stories: