தமிழகத்தை விட விலை உயர்வு எதிரொலி; புதுச்சேரியில் மது விற்பனை சரிவு: கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. உரிமம் ரத்து, சஸ்பெண்ட் உள்ளிட்ட காரணங்களால் 89 மதுக்கடைகளை திறக்க முடியவில்லை. அதேபோல் மாகே, ஏனாம் பகுதியில் அண்டை மாநிலத்தை விலையோடு ஒப்பிட்டு கொரோனா வரி விதிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன்காரணமாக மொத்தமுள்ள 475 கடைகளில் புதுச்சேரி காரைக்காலில் மட்டும் 250க்கும் குறைவான கடைகள் திறக்கப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து கடைகள் திறந்ததாலும், மீண்டும் கடையை மூடி விடப்போகிறார்கள் என்ற அச்சம் காரணமாக மதுப்பிரியர்கள் மது வாங்க ஆர்வம் காட்டினர்.

நேற்று மாலை கூட்டம் அதிகரித்ததால், இரவு 7 மணிக்கு மேல் கடைகளுக்கு முன்பாக திரண்டிருந்தவர்களை போலீசார் அடித்து விரட்டி கடையை மூடச்செய்தனர். அதிகம் விற்பனையாகும் மெக்டவுல், எம்எச், கொரியர் கிரீன், பத்வைசர், கிங்பிஷர் உள்ளிட்ட சரக்குகள் தமிழகத்தை விட குறைந்த பட்சம் ரூ. 10 முதல் ரூ, 50 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் குடிமகன்கள் விரக்தியடைந்தனர். உள்ளூர் குடிமகன்களை மட்டுமே கடை திறக்கப்பட்டதால், எதிர்பார்த்தபடி விற்பனை இல்லை என மதுக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமான நாட்களில் அதிபட்சமாக புதுச்சேரியில் ஒரு நாளைக்கு ரூ.3 கோடியும், காரைக்காலில் ரூ. 1 கோடியே 35 லட்சத்துக்கும், மாகேவில் ரூ. 65 லட்சத்துக்கும், ஏனாமில் ரூ. 35 லட்சம் என சராசரியாக ரூ.7 கோடி வரை மது விற்பனையாகும். இதன் மூலம் அரசுக்கு வரி வருவாயாக அதிகபட்சம் ரூ.2.5 கோடி வருமானமாக கிடைக்கும். ஆனால் தற்போது 90 கடைகளுக்கு மேல் சாத்தப்பட்டுள்ளதாலும், சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாததால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று கூட கடையை மூடிவிடுவார்கள் என்ற அச்சத்தில் பலர் நிறைய மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

இனி வரும் நாட்களில் கூட்டம் குறைந்து ஆட்கள் இருக்காது. தற்போது கொரோனா வரி விதிக்கப்பட்டதால், ரூ.1 லட்சத்துக்கு சரக்கு விற்பனை செய்தால், இதில் 56 ஆயிரத்தை அரசுக்கு செலுத்த வேண்டும். காலை 10 மணிக்குள் விற்பனையில் இருந்து கொரோனா வரி விதித்த தொகையை அரசுக்கு கொடுத்தால்தான் கலால்துறை கடையை திறக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படி பார்த்தாலும் ரூ.10 முதல் 20 சதவீதத்துக்கு விற்பனை வீழ்ச்சி இருக்கும். காரைக்கால் புதுச்சேரியில் கொரோனா வரி விதிப்பால், அதிக தொகை வசூலாகி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல்நாளில் ரூ.5 கோடி வரை மதுபானம் விற்பனையாகியிருக்கலாம் என்கின்றனர். விற்பனை குறைவு அதே நேரத்தில் வசூல் அதிகம் என்ற நிலை முதல்நாளில் இருந்தது. இனி வரும் நாட்களில் மேலும் சரிவை சந்திக்கும் என்கின்றனர். மதுபானம்- சாராயம் விற்பனையில் எவ்வளவு விற்பனை என்பது இனிமேல்தான் தெரியவரும். எவ்வளவு வசூல் என்பது குறித்து காலையில் அதிகாரிகளை தொடர்பு கொண்டும், தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.   

சாராயம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வில்லியனூர் ஆரியபாளையத்தில் வடி சாராய ஆலை இயங்குகிறது. இங்கு 200 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லிட்டர் வரை சாராயக்கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யப்படுவது வழக்கம். 2 மாதத்திற்குபின் தற்போது அங்கு ஊழியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆலை பராமரிப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு காலத்தில் சாராயம் சப்ளை தொடர்பான புகார் விசாரணை, சாராய பாட்டில்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட சில காரணங்களால் அங்கிருந்து சப்ளை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வரை மருத்துவமனைக்கு மட்டுமே சரக்கு சப்ளை செய்யப்படும் நிலையில் மீண்டும் உற்பத்தி தொடங்க தாமதம் ஆவதால் சாராயக்கடைகளுக்கு சரக்கு சப்ளை இல்லாமல் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. முதல்நாளிலே பெரும்பாலான சாராயக்கடைகளில் சரக்கு இல்லாமல் உடனடியாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: