உலக அளவில் 56 லட்சத்தை நெருங்கி வரும் கொரோனா பாதிப்பு: பிரேசிலில் கொரோனவால் வீடுகளுக்குள்ளேயே மடியும் கொடுமை

பிரேசிலியா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை நெருங்கி வரும் நிலையில் பிரேசில் நாட்டில் வீடுகளிலேயே ஏராளமானோர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளை உலுக்கி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் 55 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,47, 900-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்த நிலையில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

பிரேசிலில் 3,76, 669 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 23,522 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டில் மேனஸ நகரில் கொரோனா தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சரியான சிகிச்சை கிடைக்காமல் ஏராளமானோர் வீடுகளிலேயே உயிரிழந்து வருகின்றனர். கொத்து கொத்தாக உயிர்களை காவு கொடுக்கும் பிரேசில் உடலை ஒரே இடத்தில் மொத்தமாக புதைக்கும் அவலமும் அரங்கேறியுள்ளது.

Related Stories: