×

கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதிக்க கூடாது : தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை

சென்னை: கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக் கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. அதே போல் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கூடாது , சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தொற்று குறைந்து இருந்தாலும் பொது போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் வரும் வாரங்களில் கொரோனா பரவல் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்த மருத்துவ நிபுணர்கள்,வரும் வாரங்களில் கொரோனா பரவல் குறைந்தால் பொது போக்குவரத்தை தொடங்குவது பற்றி ஆலோசிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதே சமயம் 75% அரசு ஊழியர்களை பணிக்கு வர அனுமதிக்கலாம் என்றும் அரசு ஊழியர்களுக்காக தனிப் பேருந்துகளை இயக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.   

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் வருகிற 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றும், இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிப்பது குறித்தும், விமானம், ரயில் சேவையை தொடர்ந்து பேருந்துகளை இயக்கலாமா என்பது குறித்தும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 தமிழகத்தில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவும், அரசுக்கு ஆலோசனை வழங்கவும் 19 மருத்துவர்களை கொண்ட நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். இந்த குழுவினருடன் ஆலோசனை பெற்றுதான் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் படிப்படியான தளர்வுகளை முதல்வர் எடப்பாடி அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamil Nadu , Coronation, Infection, Tamil Nadu, Public Transport, Permission, Government of Tamil Nadu, Medical Specialists, Recommend
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...