சீனாவில் இருந்து கப்பலில் சென்னை வந்த பூனை 3 மாத தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு விடுவிப்பு : விரும்புபவர்கள் தத்தெடுக்கலாம் என அறிவிப்பு

சென்னை : சீனாவிலிருந்து கப்பலில் சென்னை வந்த பூனை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விரும்புபவர்கள் தத்தெடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் வேகமாக பரவத் தொடங்கியிருந்தது. இந்தியாவில் அப்போது கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்துக்குக் கப்பல் ஒன்று வந்தது. அதில் விளையாட்டு பொம்மைகள் கொண்டு வரப்பட்ட கண்டெய்னரில், கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று இருந்தது. இதைப்பார்த்த சுங்கத்துறை அதிகாரிகளும், துறைமுக அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதையடுத்து பூனையை மீட்டு கால்நடை மருத்துவ மனையில் பரிசோதனை செய்தனர். இதன்பிறகு வண்டலூர் பூங்காவுக்கு அந்த பூனை கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.கடந்த 3 மாதங்களாக சீன பூனையை கூண்டிலேயே அடைத்து வைத்து பராமரித்து வந்தனர். சீனாவில் இருந்து வந்த பூனை என்பதால் அதற்கு அவ்வபோது மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வந்தன.கொரோனா பீதி காரணமாக பூனையை கூண்டிலேயே அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு பூனை சென்னையில் உள்ள டிரஸ்ட் ஒன்றின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து பூனையை விரும்புபவர்கள் தத்தெடுத்து வளர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: