தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்; மக்கள் வெளியே சுற்ற வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிப்பது 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது.

அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை எப்போதும் வேண்டுமானாலும் தொடங்கலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

இதை 9 மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியசையும் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்ஸியஸை ஒட்டியும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியநாயக்கன் பாளையத்தில் 3 செ.மீ மழையும், கமுதியில் 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories: