முன்கூட்டியே முடிவுக்கு வருகிறது மீன்பிடி தடைக்காலம்! : தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என அறிவிப்பு

சென்னை : தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதே போல் தமிழகத்தின் மேற்கு கடற்கரையில் ஆகஸ்ட் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்றும் அவர் கூறினார். முன்னதாக மீன்பிடி தடைக்காலம் 47 நாட்களாக மத்திய அரசு குறைத்தது.

மீன் வளத்தைப் பெருக்குவதற்காக இந்திய கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாட்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையும், மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையும் தடை விதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதால் மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை 17 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இதை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசிடம் வலியுறுத்தின. இதையடுத்து மீன்பிடி தடை காலத்தை மாற்றி அமைத்து மத்திய நீர்வளத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் ஜூன் 14-ஆம் தேதிக்கு பதில் மே 31-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் கடலுக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் தேதிக்கு பதில் ஜூன் 15 ஆம் தேதிதான் தடைக்காலம் துவங்கும். ஜூலை 31ம் தேதி வரை தடைக்காலம் இருக்கும். தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. மத்திய அரசின் மேற்கண்ட அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

Related Stories: